நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பால் கொள்முதல் 1 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை ஆவின் தலைவர் சின்னத்துரை தகவல்


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பால் கொள்முதல் 1 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை ஆவின் தலைவர் சின்னத்துரை தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2019 12:00 AM GMT (Updated: 7 Jan 2019 8:36 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பால் கொள்முதல் 1 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நெல்லை ஆவின் தலைவர் சின்னத்துரை கூறினார்.

நெல்லை,

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியில் ஆவின் நிறுவனம் உள்ளது. அங்கு இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் நுழைவுவாயில் சுமார் ரூ.2 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆவின் நிறுவனத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 15-3-1986 அன்று அடிக்கல் நாட்டினார். அதன் கல்வெட்டு 32 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு நுழைவுவாயிலில் வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஆவின் தலைவர் சின்னத்துரை கலந்து கொண்டு நுழைவுவாயிலை திறந்து வைத்தார். பின்னர் அவர் எம்.ஜி.ஆர். அடிக்கல் நாட்டிய கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

அப்போது சின்னத்துரை நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை ஆவின் விற்பனை நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு 41 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விற்பனை 45 ஆயிரம் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை 50 ஆயிரம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆவின் நிறுவனம் மூலம் தினந்தோறும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதை 1 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆவின் பால் மூலம் பால்கோவா, நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரூ.80 லட்சம் வரை விற்பனை ஆகின்றன. இந்த விற்பனையை ரூ.1 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் இந்த ஆண்டு ரூ.80 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. தூத்துக்குடியில் 4 பாலகங்களும், நெல்லையில் ஒரு பாலகமும் திறக்கப்பட உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கூடுதலாக 30 பாலகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆவின் துணைத்தலைவர் கணபதி, இயக்குனர்கள் ரமேஷ், முத்துச்செல்வி, செந்தில்குமார், குழந்தையம்மாள், ராமலட்சுமி, ஸ்ரீதேவி, நீலகண்டன், ஆவின் பொதுமேலாளர் ரங்கநாதன், அதிகாரிகள் திவான் ஒலி, சாந்தி, அனுஷா, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story