மாவட்ட செய்திகள்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு + "||" + Meeting day: Public petition to the collector asking drinking water

குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இதில் கரூர் அருகே உள்ள ஜெகதாபி ஊராட்சி அய்யம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதிக்கு கடந்த சில வாரங்களாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்பு மூலம் தண்ணீர் வருவதில்லை. மேலும் ஆழ்துளை கிணறுகள் பழுந்தடைந்து உள்ளதால் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் சேமித்து வைத்து தண்ணீர் வினியோகம் செய்யவும் முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.


அரவக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், கரூர் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறையில் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே விரைந்து கடனுதவி வழங்கிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அரவக்குறிச்சி தாலுகா கோடந்தூர் வடபாகம் மற்றும் தென்பாகத்தை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், எங்கள் விவசாய நிலங்களின் அருகில் கல்குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த கல்குவாரி செயல்பட்டால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர் குறையும். எனவே கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

கரூர் மாவட்ட தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தார் சமூக முன்னேற்ற நலசங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மனு கொடுத்தனர். அதில், எங்களது சமுதாய மக்களை இழிவுபடுத்தும் விதமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசியது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கையினை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கிருஷ்ணராயபுரம் தாலுகா லாலாபேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், லாலாபேட்டை, திம்மாச்சிபுரம், மகாதானபுரம், சித்தலவாய் உள்ளிட்ட பகுதி மக்கள் மருத்துவ சேவையை பெறும் விதமாக அதிகளவில் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். எனவே குளித்தலை மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் மாவட்ட ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் முல்லையரசு உள்பட நிர்வாகிகள் அளித்த மனுவில், கரூர் அருகே ராயனூர்-கோடங்கிப்பட்டி சாலை பிரிவில் மேம்பாலம் கட்டப்படாததால் இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தாந்தோன்றிமலை காளியப்பனூர் மேற்கு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. இந்த செல்போன் கோபுரத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே செல்போன் கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று காளியப்பனூர் மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுகொடுத்தனர்.

கரூர் அருகே வேடிச்சி பாளையத்திலுள்ள ராஜா அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியை, அரசு பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி பெற்றோர், ஆசிரியர்கள் சேர்ந்து வந்து மனு கொடுத்தனர். கரூர் மாவட்ட அங்கன்வாடி மையங்களில் ஆரம்பகால குழந்தைகள் பராமரிப்பு மற்றும் கல்வி ஏதுவாளர்களாக பணியாற்றியவர்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்களுடைய பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் பணிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதனால் எங்களுக்கு வேறு வேலை கிடைக்காததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். எனவே எங்களுக்கு மீண்டும் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் மாவட்டத்தில் பாரம்பரிய சேவல் சண்டை நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்கிட வேண்டும் எனகூறி சேவல்களை தூக்கி கொண்டு வந்து கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
2. இந்திய குடியுரிமை வழங்க கோரி ராயனூர் இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு
கரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க கோரி ராயனூர் இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
3. 30 வருடங்களாக கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டரிடம் மனு
திருச்சி அருகே 30 வருடங்களாக கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
4. கஜா புயலால் பாதிக்கப்பட்ட 282 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 282 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று கலெக்டரிடம் வெள்ளப்பள்ளம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
5. மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் விஜயலட்சுமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...