10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு கலெக்டர் ரோகிணி தகவல்


10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:26 PM GMT (Updated: 7 Jan 2019 10:26 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம்,

தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா சேலம் பள்ளப்பட்டியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடிநீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய், வேட்டி, சேலை ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புகளையும், ரொக்கமாக 1,000 ரூபாயையும் வழங்கி கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1,000 அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் 1,570 ரேஷன் கடைகள் மூலம் சுமார் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள், ரூ.1,000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இந்த பணி தற்போது தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமின்றி நியாய விலை கடைகளுக்கு சென்று, பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். கூட்டம் அதிகமாக இருந்தால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ராஜமாணிக்கம், கூட்டுறவு ஒன்றியங்களின் முன்னாள் தலைவர் வெங்கடாசலம், கந்தம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிருபாகரன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு தொகுப்பை நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருந்து வாங்கி சென்றனர்.

Next Story