சபரிமலையின் புனிதம் காக்க அறவழி போராட்டங்கள் தொடரும் இந்து மக்கள் கட்சி தலைவர் பேட்டி
சபரிமலையின் புனிதம் காக்க அறவழி போராட்டங்கள் தொடரும் என்று இந்து மக்கள் கட்சியின்(தமிழகம்) மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் திருப்பூரில் கூறினார்.
திருப்பூர்,
சபரிமலை அய்யப்பன் கோவில் புனிதத்தை கெடுத்த கேரள மாநில முதல்–மந்திரி பினராயி விஜயனை கண்டித்து இந்து மக்கள் கட்சி(தமிழகம்) சார்பில் சபரிமலை எரிமேலியில் உள்ள வாபர் மசூதி நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருப்பூரில் இருந்து புறப்பட்ட இந்து மக்கள் கட்சி மகளிரணி நிர்வாகிகள் 3 பேரை திருப்பூர் வடக்கு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் 7.30 மணி அளவில் இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமாரை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
சபரிமலையில் அய்யப்பன் கோவில் சன்னிதானத்துக்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 பெண்களை கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் ரகசியமாக அனுப்பி வைத்து அய்யப்ப பக்தர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் வாபர் மசூதிக்குள் நுழைவதற்கு அறவழிப்போராட்டம் நடத்தும் தமிழ் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கேரள அரசின் கடமையாகும். ஆனால் உளவுத்துறை மூலமாக எங்கள் மகளிரணி நிர்வாகிகளை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்ற 3 பெண்களை கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும். தமிழக போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமே தவிர கைது செய்திருக்கக்கூடாது.
கம்யூனிஸ்டுகளின் இந்து விரோத போக்கையும், வன்முறை தாக்குதல்களையும், அடக்கு முறைகளையும், கம்யூனிஸ்டு அரசின் அராஜக நடவடிக்கைகளையும் அறவழியில், ஜனநாயக முறையில் இந்து மக்கள் கட்சி எதிர்த்து போராடும். சபரிமலையின் புனிதம் காக்க இந்து மக்கள் கட்சி அறவழி போராட்டங்களை தொடர்ந்து நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.