திருவாடானை தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் சங்கங்கள் மனு


திருவாடானை தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் சங்கங்கள் மனு
x
தினத்தந்தி 8 Jan 2019 4:40 AM IST (Updated: 8 Jan 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்–அமைச்சருக்கு விவசாயிகள் சங்கங்கள் மனு அனுப்பி உள்ளன.

தொண்டி,

திருவாடானை பகுதியில் உள்ள விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் முதல்–அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– திருவாடானை தாலுகாவில் நடப்பு ஆண்டில் அதிக நிலப்பரப்பில் நெற்பயிர் விவசாய பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த பணிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கிய விவசாய பணிகளால் நெற்பயிர்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து வந்த நிலையில் தொடர்ந்து போதிய மழை இல்லாததால் அவை அனைத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை முற்றிலும் பொய்த்து விட்டது.

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின்போது கூட இப்பகுதிக்கு மழை கிடைக்கவில்லை. திருவாடானை தாலுகாவில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் சிறிதளவு கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே திருவாடானை தாலுகா தான் கடும் வறட்சியை சந்தித்து உள்ளது.

இதனால் நெற்பயிர் உள்பட அனைத்து பயிர்களும் கருகிவிட்டன. கோடை உழவு, விதைப்பு, விதை நெல், அடிஉரம், களைஎடுப்பு, களைக்கொல்லி என ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்து விவசாயிகள் அனைவரும் கடன் சுமையில் சிக்கி உள்ளனர். ஏற்கனவே இந்த தாலுகா விவசாயிகள் கடும் வறட்சி மற்றும் கடன் சுமை போன்ற பல காரணங்களால் கடுமையான நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் இந்த ஆண்டும் விவசாயம் கைவிட்டதால் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளனர்.

எனவே இதில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க திருவாடானையை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தாலுகாவாக அறிவித்து நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் வறட்சி நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட சிறுதானியம், பயறு வகைகள், மிளகாய் போன்ற அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதை 200 நாட்களாக உயர்த்தி வழங்கவும் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story