விரிசல் சரிசெய்யப்பட்டதால் பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயிலை இயக்கி சோதனை


விரிசல் சரிசெய்யப்பட்டதால் பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயிலை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 7 Jan 2019 11:30 PM GMT (Updated: 2019-01-08T04:40:52+05:30)

விரிசல் சரிசெய்யப்பட்டதால் பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயிலை இயக்கி நேற்று சோதிக்கப்பட்டது. ஆனால், பயணிகள் ரெயில் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்தார்.

ராமேசுவரம்,

புண்ணிய தலமான ராமேசுவரம் தீவை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துடன் இணைப்பதில் பெரும் பங்கு வகிப்பது பாம்பன் ரெயில்வே பாலமாகும். கடலுக்குள் அமைந்துள்ள இந்த பாலம் அமைக்கப்பட்டு, 104 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த பாலத்தின் மைய பகுதியில் படகுகள் மற்றும் கப்பல்களுக்கு வழிவிடும் வகையில் தூக்குப்பாலம் உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் 4–ந் தேதியன்று, பாம்பன் தூக்குப்பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பாம்பன் ரெயில்வே பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் வரும் ரெயில்கள் அனைத்தும் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்தே மறுமார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

பாம்பன் தூக்குப்பாலத்தில் விரிசல்கள் அடுத்த சில நாட்களில் சரிசெய்யப்பட்ட போதிலும் முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பாம்பன் ரெயில்வே தூக்கு பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இதனிடையே கடந்த 3–ந் தேதி தூக்குப்பாலம் திறக்கப்பட்டு அதில் சுமார் 6 டன் வரை எடை அதிகரிக்கப்பட்டது.

மேலும் ரெயில் கடந்து செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள், உறுதித்தன்மை போன்றவை குறித்து அறிய சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டன. அதனை மத்திய அரசின் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட வல்லுனர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் பாம்பன் பாலத்தில் ரெயிலை இயக்கி அதிர்வுகளை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சந்தோஷ் கபூரியா நேற்று பாம்பன் வந்தார். அவர், பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து மோட்டார் டிராலி மூலம் தூக்குப்பாலத்துக்கு வந்தார். அங்கு நடைபெற்ற பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாலத்தின் முழு விவரங்களை தென்னக ரெயில்வே பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் சோதனைக்காக ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது.

15 காலி பெட்டிகளுடன் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் கொண்டு வரப்பட்டது. பயணிகள் யாருமின்றி காலியாக வந்த அந்த ரெயிலானது, பாம்பன் ரெயில் பாலத்தை மெதுவாக கடந்து ராமேசுவரம் சென்றது. அப்போது ஏற்பட்ட அதிர்வுகள் குறித்து சென்சார் கருவிகள் மூலம் ஆராய்ச்சி இயக்குனர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தென்னக ரெயில்வே துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் கடந்த 2–ந்தேதி முதல் பாம்பன் தூக்குப்பாலத்தில் மத்திய அரசின் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம் சார்பில் ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆய்வின் போது பாலத்தில் ஏற்படும் அதிர்வுகள், உறுதித்தன்மை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தூக்குப்பாலத்தில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த கருவிகள் சரியான முறையில் செயல்படுகின்றன. பாம்பன் ரெயில்வே பாலம் 100 ஆண்டுகளை கடந்து விட்டதால் மிகவும் கண்காணிக்க வேண்டிய பாலமாகும். ஆய்வு பணிகளை நடத்தி முடிக்க ஒரு மாத அவகாசம் கேட்டுள்ளோம். இருப்பினும் அதற்கு முன்பாகவே பணிகளை வேகமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எங்களின் ஆய்வு அறிக்கை தென்னக ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்படும். பாம்பன் ரெயில்வே பாலத்தில் ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து தென்னக ரெயில்வே துறைதான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எனவே பாம்பன் ரெயில் பாலத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கு இன்னும் கால தாமதம் ஏற்படும் என தெரிகிறது.


Next Story