விருதுநகர் நாராயண மடம் தெருவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் மனு
விருதுநகர் நாராயண மடம் தெருவில் ஏற்கனவே திட்டமிட்டபடி மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் நாராயணமடம் தெருவை சேர்ந்தவர்கள் முன்னாள் நகரசபை துணை தலைவர் பாலகிருஷ்ணசாமி தலைமையில் நகராட்சி நிர்வாகத்திடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
விருதுநகர் நகராட்சி 23, 24, 25, 26 மற்றும் 30–வது வார்டுகளில் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க நகராட்சி நூற்றாண்டு நிதியில் இருந்து 10 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட திட்டமிடப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூமிபூஜையும் போடப்பட்டது அதன்பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கப்படாத நிலையில் நாராயணமடம் தெருவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட வாய்ப்பில்லை என்றும் அதற்கு பதிலாக மதுரை ரோட்டில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மதுரை ரோட்டிலும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை.
தற்போது மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட திட்டமிடப்பட்ட இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகள் பாதிப்பதுடன் அப்பகுதியிலுள்ள சமுதாயகூடத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் தொடர்ந்து குடிநீர் வினியோகம் பாதிக்கும் நிலை நீடிக்கும்
ஏற்கனவே மிகப்பெரிய நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ள நிலையில் நாராயண மடம் தெருவில் குப்பை கிடங்கு அமைப்பது தேவையற்றதாகும் எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி நாராயண மடம் தெருவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி குடிநீர் வினியோகத்தை முறைபடுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறூ அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.