சாத்தூர் அருகே பயங்கரம் கம்பியால் அடித்து என்ஜினீயர் கொலை


சாத்தூர் அருகே பயங்கரம் கம்பியால் அடித்து என்ஜினீயர் கொலை
x
தினத்தந்தி 8 Jan 2019 5:15 AM IST (Updated: 8 Jan 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே கம்பியால் அடித்து என்ஜினீயர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். அவருடைய மகன் கார்த்திகேயன்(வயது27). டிப்ளமோ என்ஜினீயரான இவர் பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். தற்போது பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உள்ளதால் சாத்தூர் அருகே உள்ள டயர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தார்.

இந்தநிலையில் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல இருந்ததால் நேற்று முன்தினம் மாலையில் துணிகளை எடுத்து வைத்துவிட்டு, சிறிது நேரத்தில் திரும்பி வருவதாக கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இரு சக்கரவாகனத்தில் வெளியே சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. இதைதொடர்ந்து அவருடைய தந்தை சீனிவாசனும், உறவினர்களும் பல இடங்களில் கார்த்திகேயனை தேடியுள்ளனர். எனினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை சின்னகாமன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அந்த பகுதியில் சென்றவர்கள் இதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த சீனிவாசன் பதறியடித்து, அங்கு சென்று பார்த்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தது அவருடைய மகன் கார்த்திகேயன் என தெரியவந்தது.

இதற்கிடையே சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் நகர் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனும் அங்கு வந்து பார்வையிட்டார். கார்த்திகேயன் தலையில் கம்பியால் தாக்கியதற்கான அடையாளம் இருந்தது. பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதறிக்கிடந்தது.

கார்த்திகேயனின் உடல் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலையை செய்தவர்கள் யார்? என்று தெரியவில்லை.

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். துப்புத்துலக்க மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்திலிருந்து ஓடி அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று விட்டது. எனவே கொலையாளிகள் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து வாகனத்தில் தப்பிச்சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கார்த்திகேயனை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது நண்பர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து துப்புதுலக்கி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story