ஆரணியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ஆணையாளரை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்
ஆரணியில் நகராட்சி சார்பில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தபோது ஆணையாளரை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி,
தமிழக அரசு கடந்த 1-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என தடை விதித்தது.
இந்த நிலையில் நேற்று ஆரணி நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், ஓய்வுபெற்ற சுகாதார அலுவலர் லட்சுமணன் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆரணி புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஸ்வீட் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகிறார்களா? என ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடையில் தின்பண்ட பொருட்களை பேக்கிங் செய்வதற்காக வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்கள், கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர் உள்பட சுமார் 25 கிலோ கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ஆணையாளர் வாகனத்தில் ஏற்றினர்.
இதனை அறிந்த வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் நாராயணன், செயலாளர் செல்வம், பொருளாளர் செங்கீரன், மாவட்ட துணைத்தலைவர் சலீம்பேக், மாவட்ட துணை செயலாளர் ஆடிட்டர் சிவக்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒன்று கூடி ஆணையாளரையும், அவரது காரையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசால் வழங்கப்படுகிற ஆவின் பால் பிளாஸ்டிக் கவரில் இல்லையா? பிஸ்கெட் உள்ளிட்ட தின்பண்டங்கள் பிளாஸ்டிக் கவரில் இல்லையா? பிளாஸ்டிக்கை முழுமையாக அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு கூறுகிறது. அதற்கான மாற்றுவழி சொல்லாமல் அகற்றுவது சரியல்ல என கோஷமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜமீஸ்பாபு, மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வியாபாரிகளிடம், அதிகாரிகளின் காரை மடக்குவது சரியல்ல, உங்கள் கோரிக்கைகளை அலுவலகத்திற்கு சென்று கொடுங்கள் என்று கூறி சமாதானம் செய்தனர். பின்னர் அங்கிருந்து ஆணையாளரை அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story