சூளகிரி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்


சூளகிரி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 8 Jan 2019 9:30 PM GMT (Updated: 8 Jan 2019 7:07 PM GMT)

சூளகிரி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள போடூர்பள்ளம், மேலுமலை, ஏ.செட்டிப்பள்ளி ஆகிய வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டு, தொடர்ந்து கிராமங்களுக்குள் நடமாடி வருகின்றன. அத்துடன், சிறுத்தைப்புலிகளும் அடிக்கடி சுற்றித்திரிகிறது.

சூளகிரி மலை மீதும், போகிபுரம், மாதர்சனபள்ளி ஆகிய கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறுத்தைப்புலிகள் பதுங்கியிருந்து இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் நுழைந்து, அங்கு விவசாயிகளின் வளர்ப்பு பிராணிகளை தாக்கி, இரைக்காக கொண்டு செல்வது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இந்தநிலையில், நேற்று காலை சூளகிரி அருகே தாசன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமன்(வயது45) என்ற விவசாயி, தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது புதர் மறைவில் உறுமல் சத்தத்துடன் சிறுத்தைப்புலி ஒன்று படுத்து கிடந்தது. இதைக்கண்டு அவர் அலறியவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். சிறுத்தைப்புலியும் அங்கிருந்து ஓடி, காட்டுக்குள் பதுங்கி கொண்டது. பின்னர் ராமன், ஊருக்குள் சென்று, சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து கிராம மக்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து சிறுத்தைப்புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சூளகிரி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் தொடங்கி இருப்பதால், பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.

Next Story