அரசு பஸ் மோதி விபத்து: சைக்கிளில் சென்ற தி.மு.க. பிரமுகர் பலி அய்யம்பேட்டையில் பரிதாபம்


அரசு பஸ் மோதி விபத்து: சைக்கிளில் சென்ற தி.மு.க. பிரமுகர் பலி அய்யம்பேட்டையில் பரிதாபம்
x
தினத்தந்தி 9 Jan 2019 3:45 AM IST (Updated: 9 Jan 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

அய்யம்பேட்டையில் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் தி.மு.க. பிரமுகர் பலியானார்.

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது62). இவர் நூல்கண்டு வியாபாரி. அய்யம்பேட்டை பேரூர் தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர் அய்யம்பேட்டை சூலமங்கலம் சாலையில் உள்ள கடைகளுக்கு நூல்கண்டுகளை விற்பனை செய்வதற்காக சைக்கிளில் சென்றார்.

கடைகளில் நூல்கண்டுகளை விற்பனை செய்து விட்டு சூலமங்கலம் பைபாஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கேசவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் ஜெகன் என்பவரை கைது செய்தனர்.

Next Story