கஞ்சா வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி: வாலிபரை காரில் கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது


கஞ்சா வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி: வாலிபரை காரில் கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 3:45 AM IST (Updated: 9 Jan 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த விவகாரத்தில், வாலிபரை காரில் கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த அம்பத்தூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 22). ஜெ.ஜெ.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். ஒரு விருந்தில் கலந்து கொண்ட போது குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த இமயாத் அலி(24) என்பவருடன் சுரேசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது தன்னிடம் அதிக போதை ஏற்படுத்தும் விலை உயர்ந்த கஞ்சா இருப்பதாகதெரிவித்தார்.

அவரது ஆசை வார்த்தையில் மயங்கிய சுரேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கஞ்சா வாங்குவதற்காக ரூ.80 ஆயிரத்தை இமயாத் அலியிடம் கொடுத்தார்.

ஆனால் பணத்தை வாங்கிய இமயாத் அலி கூறியபடி கஞ்சாவையும், அதற்கான பணத்தையும் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தன்னை ஏமாற்றிய இமயாத் அலியை வேறு இடத்திற்கு வரவழைத்து நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை பெற சுரேஷ் திட்டமிட்டார். அதன்படி சுரேசின் நண்பர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு செல்போன் மூலம் இமயாத் அலியை தொடர்பு கொண்டு தனக்கு கஞ்சா தேவைப்படுவதாகவும், பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம் அருகே பணத்துடன் காத்திருப்பதாவும் தெரிவித்தார்.

ஆனால் இமயாத் அலி அங்கு வராமல் தனது உறவினர் சுஹைப்(21) என்பவரை மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தார். அங்கு காரில் தயாராக இருந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக இமயாத் அலியின் உறவினரான சுஹைப்பை காரில் கடத்தி சென்றனர்.

பின்பு இமயாத் அலியை செல்போனில் தொடர்பு கொண்டு, “உனது உறவினர் சுஹைப்பை கடத்தி விட்டோம். ரூ.80 ஆயிரத்தை கொடுத்தால்தான் அவரை விடுவோம்” என தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சுஹைப்பின் பெற்றோர் மகன் கடத்தப்பட்டது குறித்து பரங்கிமலை போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் செல்போன் மூலம், “சுஹைப்பின் பெற்றோர் பேசுகிறோம். போரூர் அருகே வந்தால் நீங்கள் கேட்ட பணத்தை கொடுத்து விடுகிறோம்” என கூறினார்கள்.

இதனை நம்பிய சுரேஷ் தனது நண்பர்களுடன் போரூர் அருகே காரில் வந்தார். அங்கு ஏற்கனவே பதுங்கி இருந்த போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்த சுஹைப்பையும் மீட்டனர். மேலும் அவரை கடத்தி சென்ற சுரேஷ், அவரது நண்பரும் கல்லூரி மாணவருமான மனோஜ்(22), முருகன் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story