திருச்சியில் தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தம் தொடங்கியது: வங்கி-தபால் சேவை முடக்கம்


திருச்சியில் தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தம் தொடங்கியது: வங்கி-தபால் சேவை முடக்கம்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:30 AM IST (Updated: 9 Jan 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தம் தொடங்கியது. வங்கி, தபால் சேவை முடங்கியது. இதனால் ரூ.400 கோடிபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

திருச்சி,

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிராகவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று முதல் தொடங்கினர்.

இதேபோல பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைத்து ஒன்றாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், வாராக்கடன் வசூலிப்பதில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க கோரியும் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். தமிழகத்திலும் மத்திய தொழிற்சங்கத்தினருடன், மாநில தொழிற்சங்கத்தினர் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருச்சியிலும் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. வேலைநிறுத்தத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சி மத்திய, சத்திரம் பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல ஓடின. பஸ் நிலையங்களிலும், கண்டோன்மெண்ட், தீரன் நகர், மலைக்கோட்டை உள்ளிட்ட போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இருப்பினும் மாற்று ஏற்பாடு மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் சேவையில் பாதிப்பு எதுவும் இல்லை. 3 ஆயிரம் ஆட்டோக்கள் மாவட்டம் முழுவதும் ஓடாது என அறிவித்திருந்தனர். ஆனாலும் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடின. சி.ஐ.டி.யூ. சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஆட்டோக்களை இயக்கவில்லை.

அரசு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. திருச்சி ஜங்ஷன் அருகே ஜென்னிபிளாசா வளாகத்தில் இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு வங்கி ஊழியர்கள் நேற்று காலை திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குருமூர்த்தி கோரிக்கைகள் குறித்து பேசினார்.

போராட்டம் குறித்து மாவட்ட செயலாளர் ராமராஜ் கூறுகையில், “மாவட்டம் முழுவதும் 200 வங்கிகளில் பணியாற்றும் 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு பரிவர்த்தனை பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்” என்றார். ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் வங்கி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வாடிக்கையாளர்களும் கடும் அவதி அடைந்தனர். ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தவிர மற்ற பொதுத்துறை வங்கிகளில் சேவை முடங்கியது.

இதேபோல தபால்துறை ஊழியர்கள் கூட்டமைப்பினர், ஆர்.எம்.எஸ். அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். திருச்சி தலைமை தபால் நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் கோட்ட செயலாளர் வரதநாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தபால் ஊழியர்கள், ஆர்.எம்.எஸ். ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தபால் கள் வினியோகிக்கப்படாமல் முடங்கி கிடக்கிறது.

எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கத்தினர் ஜங்ஷன் அருகே உள்ள எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் சங்கத்தின் துணை தலைவர் ஜோன்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இணை செயலாளர் அறிவுக்கடல் கோரிக்கைகள் குறித்து பேசினார். திருச்சி வருமான வரித்துறை அலுவலக ஊழியர்களும், வணிகவரித்துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தத்தால் அலுவலக பணிகள் முடங்கி உள்ளது. ஆனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. 

Next Story