உல்லாஸ்நகரில் இளம்பெண்ணின் சாவுக்கு காரணமான போலி டாக்டர் பிடிபட்டார்


உல்லாஸ்நகரில் இளம்பெண்ணின் சாவுக்கு காரணமான போலி டாக்டர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 9 Jan 2019 3:30 AM IST (Updated: 9 Jan 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

உல்லாஸ்நகரில் இளம்பெண்ணின் சாவுக்கு காரணமாக இருந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

அம்பர்நாத்,

தானே மாவட்டம் உல்லாஸ்நகரில் கிளினிக் நடத்தி வந்தவர் பிரவேஷ் சர்மா (வயது49). கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கடும் வயிற்றுவலியால் துடித்த 17 வயது இளம்பெண் ஒருவர் இவரது கிளினிக்கில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சைக்கு பின் இளம்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவர் வேறொரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக உல்லாஸ்நகர் சென்டிரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலி டாக்டர் கைது

அவரது சாவுக்கான காரணத்தை கண்டறிய முக்கிய உடல் உறுப்புகள் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்யப்பட்டன. இதில் பிரவேஷ் சர்மா இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரவேஷ் சர்மா முறையான அனுமதி பெறாமல் கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது. அவர் உண்மையான டாக்டரா என்பதை கண்டறிவதற்காக போலீசார் மராட்டிய மருத்துவ கவுன்சிலின் உதவியை நாடினார்கள்.

இதில், பிரவேஷ் சர்மா மருத்துவ கவுன்சிலின் பதிவு இன்றி டாக்டராக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போலி டாக்டர் பிரவேஷ் சர்மாவை அதிரடியாக கைது செய்தனர்.

Next Story