விளையாட்டுக்காக கடத்தல் நாடகம் ஆடிய தனியார் நிறுவன ஊழியருக்கு கோர்ட்டு தண்டனை
விளையாட்டுக்காக கடத்தல் நாடகமாடிய தனியார் நிறுவன ஊழியருக்கு தண்டனை வழங்கி வசாய் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வசாய்,
பால்கர் மாவட்டம், வாலிவ் போலீசாருக்கு சம்பவத்தன்று போன் ஒன்று வந்தது. அப்போது பேசியவர், தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திக்கொண்டு வசாய் கிழக்கு துங்கரேஷ்வர்பாடா அருகே மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையில் செல்வதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து துங்கரேஷ்வர் நெடுஞ்சாலை பகுதிக்கு சென்ற போலீசார் அந்த வழியாக சென்ற வாகனங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
எனினும் அந்த வழியாக சென்ற காரில் யாரும் கடத்தப்படவில்லை. இதையடுத்து போலீசார் போன் செய்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. போலீசார் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், போன் செய்தவர் வசாய் பாட்டா பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சிவ்குமார் கவுதம் (வயது36) என்பது தெரியவந்தது.
விளையாட்டுக்காக நாடகம்
சிவ்குமார் கவுதமுக்கு என்ன ஆனது என்பது குறித்து விசாரிக்க போலீசார் சம்பவத்தன்று காலை அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் அவர் தூங்கி கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, விளையாட்டுக்காக கடத்தல் நாடகம் ஆடியதாக கூறினார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவருக்கு ரூ.1,000 அபராதம் மற்றும் அன்றைய தினம் கோர்ட்டு முடியும் வரை அங்கேயே இருக்க உத்தரவிட்டது.
Related Tags :
Next Story