கடனை தள்ளுபடி செய்யக் கோரி சாலை மறியல் செய்த விவசாயிகள் கைது


கடனை தள்ளுபடி செய்யக் கோரி சாலை மறியல் செய்த விவசாயிகள் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 5:00 AM IST (Updated: 9 Jan 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காளையார்கோவில் மற்றும் திருப்புவனம் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

காளையார்கோவில்,

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதற்கு எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை பரிந்துரை செய்து உடனடியாக அமுல்படுத்த வேண்டும். மாவட்டத்தை வறட்சி மாவட்ட அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காளையார்கோவில் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் கோபால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் திருச்செல்வம், முருகேசன் மற்றும் விவசாய சங்க ஒன்றிய தலைவர் உடையார், ஒன்றிய செயலாளர் முனியாண்டி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 2 மூதாட்டிகள் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு, சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் போரட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சிவகங்கை கோட்டாட்சியர் தலைமையில் சம்பந்தப்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு காணப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் திருப்புவனம் நரிக்குடி ரோடு விலக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேர்களை திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது கைது செய்தார்.


Next Story