புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை உடனடியாக வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை உடனடியாக வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதாரண்யம்,

கஜா புயலினால் வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எண்ணற்ற தென்னை மரங்கள், மா மரங்கள், தேக்கு மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் சாய்ந்தன. அதேபோல வீடுகள் சேதமானது. மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமானதால் எண்ணற்ற கிராமங்கள் இருளில் மூழ்கின. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ இடமில்லாமல் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

புயலினால் வீடு மற்றும் பொருட்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்க அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில் வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் இன்னும் நிவாரண தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தமிழக அரசின் உத்தரவின் படி புயலால் பாதிக்கப்பட்ட ஒரு சில பகுதிகளில் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம உதவியாளர்கள் உதவியுடன் அரசின் மற்ற துறைகளை சேர்ந்த வெளியூர் அலுவலர்கள் கணக் கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவசர நிலையில் பட்டியல் எடுக்கப்பட்டதால் எண்ணற்ற பயனாளிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளன. பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே நிவாரண தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பட்டியலில் விடுபட்டது, வங்கி கணக்கு எண், ஆதார் எண், இணைய சேவை குறைபாடு என்பன போன்ற பல்வேறு காரணங்களால் 40 சதவீதம் பயனாளிகளுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை.

நிவாரணம் கிடைக்காதவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழ்மைநிலையில் உள்ளவர்கள் ஆவர். இவர்கள் தினமும் வங்கிகளுக்கு சென்று வரிசையில் நின்று தனது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா? என தெரிந்து வருகின்றனர். அதேபோல தாசில்தார் அலுவலகத்தில் நேரில் சென்று நிவாரண தொகை கேட்டு மனு அளித்து வருகின்றனர்.

எனவே நிவாரணம் கிடைக்காதவர்கள் அளிக்கப்படும் மனுக்களை தனியாக பதிவேடுகள் பயன்படுத்தி பதிவு செய்யப்பட வேண்டும். புயல் பாதிப்பால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொதுமக்கள் நிவாரணம் தேடி அலைவதால் கூலி வேலைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகை உடனடியாக வழங்க நாகை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குடிசை வீடு இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்பேரில் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் உள்ள குடிசை வீடு, ஓட்டு வீடுகளை இழந்த பொதுமக்கள் கான்கிரீட் வீடு பெறுவதற்காக நகராட்சியில் வீட்டு வரி செலுத்தி, அந்த ரசீதுடன் நிலத்தின் சர்வே எண் உள்பட ஆவணங்களை இணைத்து மனு கொடுத்து வருகிறார்கள். ஆதலால் நேற்று வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் வீட்டு வரி செலுத்துவதற்காக எண்ணற்ற பொதுமக்கள் திரண்டனர். வழக்கத்தை விட மக்களின் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் அதிகமாக இருந்ததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story