தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2019 4:45 AM IST (Updated: 10 Jan 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று தஞ்சையில், மு.க.ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் உள்ள மாதாக்கோட்டையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்த உள்ளோம். தி.மு.க.வின் வளர்ச்சிக்கு அடிப்படையாக பிரசாரம் கிராமப்பகுதிகளில் தான் அதிகம் இருந்தது. கிராமம் தான் முக்கியம். பல கிராமங்கள் ஒன்று சேர்ந்தது தான் ஒன்றியம். கிராமம் தான் கோவில். கடவுள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் கோவிலை தேடி வந்துள்ளோம். ஆலயத்தை நாடி வந்துள்ளோம்.

தற்போது டி.வி., செல்போன் வந்து விட்டது. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் உடனுக்குடன் பார்க்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் அக்கறையோடு கலந்து கொண்டுள்ளர்கள். விரைவில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. முன்பு குடவோலை முறையில் ஊருக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்தீர்கள். அதன் பின்னர் வாக்குச்சீட்டு, தற்போது எந்திர முறையில் பொத்தானை அழுத்துகிறீர்கள். அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது.

தற்போது தி.மு.க. சார்பில் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்து வருகிறோம். தமிழகத்தில் இந்த ஆட்சி எப்போது அகற்றப்படும், எங்களுக்கு விடிவு காலம் எப்போது வரும், தி.மு.க. ஆட்சி எப்போது உதயமாகும் என்று நீங்கள் காத்து இருக்கிறீர்கள். தமிழகத்தில் அடிமை ஆட்சி, தமிழகத்தின் உரிமையை அடமானம் வைக்கும் ஆட்சி நடக்கிறது. அதேபோல் மத்தியில் உள்ள மோடியின் ஆட்சியால் இந்தியா முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள இந்த 2 ஆட்சிகளுக்கும் விடை கொடுக்கும் வகையில் நீங்கள் கடமையை ஆற்ற வேண்டும். இங்கு பேசியவர்கள், கஜா புயல் நிவாரணம் சரியாக கிடைக்கவில்லை என கூறி உள்ளர்கள். நாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தி.மு.க. சார்பில் 200 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. ரூ.1 கோடியும் நிதி வழங்கினோம்.

தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது. கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சர். 50 ஆண்டுகள் தி.மு.க. தலைவர். 75 ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்துள்ளார். எத்தனையோ பிரதமர், ஜனாதிபதியை உருவாக்க காரணமாக இருந்துள்ளார்.

கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது, அவருடைய உடல்நிலை குறித்து அவ்வப்வோது அறிக்கைகள் மூலம் தகவல்களை தெரிவித்தோம். ஆனால் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது அவரை பற்றி எந்த உண்மையான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஜெயலலிதா அரசியல் ரீதியாக நமக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல் அமைச்சர். அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று நாங்கள் முதலில் இருந்தே கேட்டு வருகிறோம். ஆனால் தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகம் நடக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணமாக இருந்தாலும், அது இ.பி.எஸ், ஓ.பி.எஸ், டி.டி.வி., சசிகலா என யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

தற்போது உள்ள ஆட்சி, டெல்லியின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதேபோல் உங்கள் கோரிக்கைகளும் நிறைவேற நாம் எதிர்பார்க்கிறவர் மத்தியில் பிரதமராக வர வேண்டும். எனவே இந்த 2 ஆட்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது தி.மு.க. ஆட்சிக்கு தொடக்கப்புள்ளியாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பெண்கள், மதுக்கடைகளை மூட வேண்டும். கஜா புயல் நிவாரணம் அனைவருக்கும் வழங்க வேண்டும். முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். கரும்புக்கான நிலுவைத்தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களை தூர்வாரி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.

முன்னதாக மாதாக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அங்கு நடந்த தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த என்ஜினீயர் அமல்ராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் நீலமேகம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் காந்தி, அருளானந்தசாமி, முரளிதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண். ராமநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story