மணல் குவாரி, குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி நீரேற்று நிலையத்தை முற்றுகையிட முயன்ற 44 பேர் கைது


மணல் குவாரி, குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி நீரேற்று நிலையத்தை முற்றுகையிட முயன்ற 44 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 8:03 PM GMT)

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி, குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி திருமானூரில் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட முயன்ற 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியையும், அங்கிருந்து தஞ்சைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தையும் கைவிடக்கோரியும் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருமானூர் பொதுமக்கள், கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக் குழு மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து திருமானூரில் உள்ள அரியலூர் நகராட்சி தலைமை நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதனால், அந்தப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தலைமை நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக திருமானூர் பொதுமக்கள், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் திருமானூர் பழைய போலீஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தலைமை நீரேற்று நிலையத்துக்கு வந்தடைந்தனர். பின்னர் தலைமை நீரேற்று நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அரசு மணல் குவாரி, தஞ்சைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பெண்கள் உள்பட 44 பேரை கைது செய்தனர். 

Next Story