நாகர்கோவிலில் துணிகரம்: ஏ.டி.ஜி.பி. அலுவலக பெண் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை-ரூ.1 லட்சம் கொள்ளை


நாகர்கோவிலில் துணிகரம்: ஏ.டி.ஜி.பி. அலுவலக பெண் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை-ரூ.1 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 9:28 PM GMT)

நாகர்கோவிலில் ஏ.டி.ஜி.பி. அலுவலக பெண் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் புத்தேரியில் ஸ்ரீ பெருமாள் நகர் உள்ளது. இந்த நகரில் உள்ள ஸ்ரீ எம்பெருமாள் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 31), திருவனந்தபுரத்தில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசன்னகுமாரி, சென்னையில் உள்ள ஏ.டி.ஜி.பி. அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணி நிமித்தமாக சென்னையில் தங்கி இருக்கிறார். இதன் காரணமாக கோபால கிருஷ்ணனும் தனது கடையிலேயே தங்கி விடுவது வழக்கம். அவ்வப்போது மட்டும் புத்தேரியில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வார். இதனால் வீட்டை பிரசன்னகுமாரியின் தாயார் சந்திரகலாபரி பராமரித்தார்.

இந்த நிலையில் சந்திரகலாபரி கடந்த 1-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு இரணியல் தலக்குளத்தில் உள்ள தன் மூத்த மகளை பார்க்க சென்று விட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லை.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பிய சந்திரகலாபரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏன் எனில் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை யாரோ மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அதன் பிறகு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் பணம், நகைகளை தேடியுள்ளனர். இதற்காக வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அங்குமிங்குமாக தூக்கி வீசி, படுக்கை அறையில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 32 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இதுபற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அதோடு வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளனரா? என்றும் சோதனை நடத்தினர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் ரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் பல்வேறு இடங்களை மோப்பம் பிடித்த அந்த நாய், சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகே ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால் நெருக்கமாக கிடையாது. சற்று தள்ளி காணப்படுகிறது. இதன் காரணமாக வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தது, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன்புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 80 பவுன் நகை மற்றும் ரூ.47 ஆயிரத்தை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர். அந்த பரபரப்பு முடிவதற்குள் மேலும் ஒரு வீட்டில் இதுபோன்று பெரிய கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஏற்கனவே நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில், எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள். அப்படி இருக்க தற்போது போலீஸ் அதிகாரி அலுவலக பெண் அமைச்சு பணியாளர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story