தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை; கிராம சபைக் கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. உறுதி


தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை; கிராம சபைக் கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. உறுதி
x
தினத்தந்தி 9 Jan 2019 11:30 PM GMT (Updated: 9 Jan 2019 10:34 PM GMT)

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. சார்பில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபைக் கூட்டம் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. கிராம பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில் ஆவியூர் கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை இக்கூட்டத்தில் தெரிவித்தனர். அதன்படி ஆவியூரில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் மக்கள் தொகை அதிகரித்தும் மருத்துவ வசதி இல்லை. எனவே இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு என்று சுகாதார வளாகம் ஏற்படுத்த வேண்டும்.

ஆவியூர் கிராமத்தில் நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டது. இதனால் எங்கு போர்வெல் போட்டாலும் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நிலையூர்–கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை முழுமைப்படுத்தி கம்பிக்குடி கால்வாய் மூலம் ஆவியூர் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும். தூத்துக்குடி–மதுரை நான்கு வழிச்சாலையில் ஆவியூர் கிராமம் அருகே சர்வீஸ் சாலை அமைக்காததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

எனவே விபத்துகளை தடுக்க 4 வழிச்சாலையில் ஆவியூர் பஸ் நிலையம் அருகே சர்வீஸ் சாலை அமைக்கப்பட வேண்டும். கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ள நிலையில் அங்கு கிராம நிர்வாக அலுவலரை பார்க்க முடிவதில்லை.

இவ்வாறு தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் பல்வேறு குறைகளையும், கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

ஆவியூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதால் அந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு சிறுமி எம்.எல்.ஏ.விடம் வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கிராம மக்களிடையே பேசியதாவது:–

எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து ஆவியூர் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்கு ஒரு சிறுமி டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் என்று தெரிவித்தார். அந்தக் கடை தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மூடப்படும்.

கம்பிக்குடி கால்வாய் திட்டம் 1998–ம் ஆண்டு நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தொடங்கப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சி வந்த பின்பு முறையாக இந்த திட்டத்தை தொடராமல் கிடப்பில் போட்டு விட்டனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி ஆவியூர் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஆவியூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் பேசினேன். அதன் பின்பு ஒரு குழு அமைத்து பார்வையிட்டு சென்றுள்ளனர். அடுத்து சட்டசபை கூடும் போது ஆவியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருக்க உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கூறினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், நரிக்குடி ப.பா.போஸ், கண்ணன், திருச்சுழி சந்தனபாண்டியன், காரியாபட்டி நகர செயலாளர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் சண்முகச்சாமி, கமலிபாரதி, முன்னாள் யூனியன் துணைத் தலைவர் மணி என்ற ராமநாதன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தமிழ்வாணன், குரண்டி சிவசக்தி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சிதம்பர பாரதி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் செல்வி மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story