பெண்கள் விடுதிகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை முறையாக பின்பற்றக்கோரி வழக்கு; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்


பெண்கள் விடுதிகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை முறையாக பின்பற்றக்கோரி வழக்கு; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 Jan 2019 4:15 AM IST (Updated: 10 Jan 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் விடுதிகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை முறையாக பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

சமுதாயத்தில் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் வேலைக்காகவும், படிப்புக்காகவும் வெளியூர்களுக்கு சென்று தங்கி இருப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. திருச்சி, மதுரை, சென்னை, நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் பெண்கள் தங்கும் விடுதிகள், இல்லங்கள், பணம் கொடுத்து தங்கும் வீடுகள் அதிகரித்து உள்ளன.

வெளியூர் சென்று விடுதிகளில் தங்கும் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள், இல்லங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014–ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி கட்டிடத்தின் உறுதி மற்றும் தூய்மை தன்மை குறித்து பொதுப்பணித்துறையிடம் சான்றிதழ் பெறுவதோடு பாதுகாப்பு வசதிகள் தொடர்பாக தீயணைப்பு துறையிடம் சான்றிதழ் பெற்ற பின், மாவட்ட கலெக்டரிடம் விடுதி நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களும் அளிக்கப்பட்டு உறுதி செய்த பின்பு பெண்கள் இல்லம், விடுதி நடத்த அனுமதி வழங்கப்படும்.

ஆனால் லஞ்சம் கொடுத்து முறைகேடாக சான்றிதழ்கள் பெற்று விடுதிகளுக்கு அனுமதி வாங்கப்படுகிறது. சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி கட்டமைப்புகள் இல்லாமல் வீடுகளை வாடகைக்கு எடுத்து விடுதிகள் நடத்துகிறார்கள். மேலும் இவற்றை தவறாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் கூட முறையான அனுமதி பெறாமல் பெண்கள் விடுதி நடத்தி வந்தவரே, அங்குள்ள அறைகளில் ரகசிய கேமராக்கள் வைத்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே மேற்கண்ட சட்டத்தை முறையாக அமல்படுத்தவும், முறைகேடாக சான்றிதழ்கள் பெறுபவர்கள் மீதும், சான்றிதழ்கள் அளிக்கும் அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story