சிவகங்கை, காரைக்குடியில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 216 பேர் கைது


சிவகங்கை, காரைக்குடியில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 216 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை, காரைக்குடியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

காரைக்குடி,

மத்திய அரசு புதிய பொருளாதார கொள்கையை கைவிட வேண்டும், தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது, குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி. மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கி வருகிறது.

இந்தநிலையில் சி.ஐ.டி.யூ.சி. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக அண்ணா சிலை பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 224 பேரை காரைக்குடி போலீசார் கைதுசெய்தனர்.

இதேபோல் சிவகங்கை அரண்மனைவாசலில் இருந்து ஊர்வலமாக சென்ற சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஐ.என்.டி.யூ.சி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலுக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் வீரய்யா, தொ.மு.ச. வீரபாண்டியன், ஐ.என்.டி.யூ.சி. சார்பில் மாவட்ட தலைவர் வீரகாளை ஆகியோர் தலைமை தாங்கினர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 92 பேரை சிவகங்கை டவுன் போலீசார் கைது செய்தனர்.


Next Story