ஈரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 380 பேர் கைது


ஈரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 380 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 4:40 AM IST (Updated: 10 Jan 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 380 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். 58 வயது பூர்த்தியான அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், ஒப்பந்த முறைகளை கைவிட்டு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை உறுதிப்படுத்தி வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 10 தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் மற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டதால் ஈரோடு மாவட்டத்தில் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. ஒரு சில இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஈரோடு பஸ் நிலையத்தில் சத்தி ரோடு நுழைவு வாயில் பகுதியில் நேற்று காலை திரண்டனர். அங்கு தொழிற்சங்கத்தினர் திரண்டு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஸ்ரீராம், தொழிலாளர் முன்னேற்ற பேரவை மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்து மஸ்தூர் சபா மாவட்ட செயலாளர் சண்முகம், அகில இந்திய தொழிலாளர் மைய கவுன்சில் மாநில செயலாளர் கோவிந்தராஜ், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் காளியப்பன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் வெற்றி செல்வன், அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் சம்மேளன மாநில இணைச்செயலாளர் குணசேகரன், எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஹசன்பாபு, மாவட்ட தலைவர் அப்துல்ரகுமான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ஹசன்அலி, பொதுச்செயலாளர் லுக்மான்ஹக்கீம் உள்பட தொழிற்சங்கத்தினர் பலர் திரண்டு நின்று கோஷங்களை எழுப்பினார்கள்.

மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அவர்கள் சத்திரோடு நோக்கி நடந்து சென்றனர். பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் முன்பு சத்திரோட்டில் தொழிற்சங்கத்தினர் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ராஜகுமார் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.

இதில் 30 பெண்கள் உள்பட மொத்தம் 380 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story