அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த நீதிபதி ராகவன் தலைமையில் குழு; மதுரை ஐகோர்ட்டு நியமித்தது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான குழுவை மதுரை ஐகோர்ட்டு நேற்று நியமித்தது.
மதுரை,
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று (வருகிற 15–ந்தேதி) ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதற்கு அனுமதியும், தேவையான போலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்“ என கோரியிருந்தனர்.
இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று அவனியாபுரத்தைச் சேர்ந்த சிலர் தாக்கல் செய்த மனுக்களில், ‘பல ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு தலைவராக ஒரே நபர் தான் இருந்து வருகிறார். எனவே அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்புடன் கூடிய விழாக் குழுவை அமைத்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும்‘ என கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, “ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க இந்த கோர்ட்டு விரும்பவில்லை. கிராம மக்கள் ஒற்றுமையுடன் விழாவை நடத்த முன் வர வேண்டும். இல்லையென்றால் தடை விதிக்க நேரிடும்“ என்று தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள்.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 2017–ம் ஆண்டு இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் ஒன்று கூடி, தமிழக கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக போராடினார்கள். அதன் பயனாக பிராணிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி பெற்ற அனுமதியை அவமதிக்கும் விதமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சினை உள்ளது. இந்த ஆண்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை அமைதியான முறையில் நடத்த குழு நியமிக்கப்படுகிறது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராகவன் நியமிக்கப்படுகிறார்.
ஐகோர்ட்டு வக்கீல்கள் பி.சரவணன், திலீப்குமார், ஆனந்த் சந்திரசேகர் மற்றும் அவனியாபுரம் கிராம மக்கள் சார்பில் 16 பேர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருப்பார்கள். குழு உறுப்பினர்கள் உரிய ஆலோசனைகளை மட்டுமே தெரிவிக்க முடியும். தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க அதிகாரம் கிடையாது. நன்கொடைகள் வசூலிப்பதை தான் இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டாக வைத்துள்ளனர். எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக தனியாக வங்கி கணக்கு தொடங்கி, இந்த குழுவினர்தான் நன்கொடைகளை வசூலிக்க வேண்டும். இதற்கான ரசீதுகளை வழங்கி, கணக்குகளை முறைப்படுத்த வேண்டும்.
மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விழாவில் முதல் மரியாதை என்ற பெயரில் காளைகளுக்கோ, காளைகளின் உரிமையாளர் என யாருக்கும் மரியாதை செய்யக்கூடாது. ஜல்லிக்கட்டு விதிகளை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம். மேற்கண்ட இந்த உத்தரவு வருகிற 15–ந்தேதி நடக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே பொருந்தும்.
அன்றைய தினம் ஜல்லிக்கட்டு நடத்தியது தொடர்பான அறிக்கையையும், வீடியோ பதிவையும் மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் விழா கமிட்டி தனித்தனியாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு வருகிற 21–ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.
இதேபோல அலங்காநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “அலங்காநல்லூரில் குறிப்பிட்ட ஒரு கட்சியை சேர்ந்தவர்கள்தான் விழா கமிட்டியாக இருந்து ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். இந்த கமிட்டியில், கிராம மக்கள் அனைத்து தரப்பினர் சார்பிலும் உரிய பிரதிநிதிகளை சேர்த்து விழாவை நடத்த உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று பகல் 1 மணியளவில் விசாரணைக்கு எடுத்தனர்.
அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் இன்று (அதாவது நேற்று) நடந்தது. முடிவில், விழா கமிட்டியில் ஏற்கனவே 24 பேர் உள்ளனர். தற்போது அனைத்து தரப்பினருக்கும் முன்னுரிமை வழங்கி மொத்தம் 35 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்“ என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.