மாவட்ட செய்திகள்

பரமக்குடியில் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய பண்டலில் ரூ.37¼ லட்சம்; நகை வியாபாரியிடம் போலீசார் தீவிர விசாரணை + "||" + Rs 37 lakhs in the luggage carrying from the railway running in paramakudi Police investigation

பரமக்குடியில் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய பண்டலில் ரூ.37¼ லட்சம்; நகை வியாபாரியிடம் போலீசார் தீவிர விசாரணை

பரமக்குடியில் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய பண்டலில் ரூ.37¼ லட்சம்; நகை வியாபாரியிடம் போலீசார் தீவிர விசாரணை
ஓடும் ரெயிலில் இருந்து பண்டலுடன் ரூ.37¼ லட்சம் தூக்கி வீசப்பட்டு கிடந்த சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நகை வியாபாரியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரமக்குடி,

மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு நேற்று காலை பயணிகள் ரெயில் சென்றது. இந்த ரெயில் பரமக்குடி ரெயில் நிலையத்திற்கு காலை 8.25 மணிக்கு வந்தது.

அப்போது, பரமக்குடி பொன்னையாபுரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற போது, ரெயிலில் இருந்து ஒரு பண்டல் திடீரென தூக்கி வீசப்பட்டு, கேட்பாரற்று ஒரு ஓரமாக கிடந்தது. அப்போது அந்த வழியாக வந்த பொன்னையாபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாமுவேல் மோசஸ் அந்த பண்டலை எடுத்துள்ளார். அது சற்று கனமாக இருந்ததால் அவர் அதனை வீட்டிற்கு எடுத்துச்செல்லாமல் அருகில் இருந்த கந்தசாமி நடத்தி வரும் டீக்கடையில் கொடுத்துள்ளார்.

மேலும் சாமுவேல் மோசஸ் அந்த டீக்கடைக்காரரிடம் “இந்த பண்டலை தேடி யாராவது வந்தால் கொடுத்து விடுங்கள், நான் வீட்டுக்கு சென்று குளித்து விட்டு வருகிறேன்“ என கூறிச் சென்றுள்ளார். இதற்கிடையே சிறிது நேரத்தில் ராமநாதபுரம் செட்டியார் தெருவை சேர்ந்த மகேந்திரன் (வயது 47) என்பவர் வந்து அந்த பண்டலை தேடியுள்ளார். பின்னர் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று விசாரித்த போது, அந்த பண்டல் அங்கிருந்தது தெரியவந்தது. எனவே கடைக்காரரிடம் அந்த பண்டலை தருமாறு கேட்டுள்ளார்.

உடனே அந்த டீக்கடைக்காரர், அவரிடம் பண்டலை கொடுத்த சாமுவேல் மோசசிடம் செல்போனில் விவரத்தை கூறியுள்ளார். பின்னர் அடுத்த சில நிமிடங்களில் சாமுவேல் மோசசும் அந்த டீக்கடைக்கு வந்தார்.

அந்த பண்டல் தேடி வந்த மகேந்திரனுடையது தானா? என்பதை அறிய விசாரித்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் அந்த பண்டலை பிரித்துப் பார்க்க மகேந்திரன் விடாததால் மற்றவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் இந்த விவகாரம் பற்றி பரமக்குடி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் அந்த டீக்கடைக்கு விரைந்து வந்து அந்த பண்டலை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக மகேந்திரன் மற்றும் சாமுவேல் மோசஸ், கந்தசாமி ஆகிய 3 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம், ராமநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன் கூறும்போது, “நான் பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி எனவும், அந்த பண்டலில் ரூ.37 லட்சத்து 26 ஆயிரம் உள்ளது“ என்று கூறியதை தொடர்ந்து போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பழைய நகைகளை விற்பனை செய்து அந்த பணத்தை பண்டல் கட்டி ரெயிலில் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் வருமானவரி புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து மதுரையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள், பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பண்டலில் 500 ரூபாய் நோட்டு கட்டுக்கட்டாக இருப்பதாகவும், அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த பணத்தை மகேந்திரன் நகைகளை விற்றுத்தான் கொண்டு வந்தாரா? அப்படியே கொண்டு வந்திருந்தாலும் அவர் ஏன் ஓடும் ரெயிலில் இருந்து அதனை தூக்கி வீச வேண்டும்? இதன் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.