பொங்கல் பண்டிகை கொண்டாட திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்; பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது


பொங்கல் பண்டிகை கொண்டாட திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்; பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 12 Jan 2019 10:45 PM GMT (Updated: 12 Jan 2019 7:18 PM GMT)

பொங்கல் பண்டிகை கொண்டாட திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் நேற்று சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளிமாவட்ட தொழிலாளர்கள் அதிகம் பேர் பணியாற்றி வருகிறார்கள். பொங்கல் பண்டிகை கொண்டாட இவர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பெரும்பாலான தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.

அதன்படி திருப்பூரில் இருந்து சென்னை, சேலம், கோவைக்கு பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதுபோல் தேனி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், செங்கோட்டை, திருநெல்வேலி, கரூர் போன்ற பகுதிகளுக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்காக புதிய பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிகள் பஸ்களில் ஏறுவதற்கு வசதிகாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு, பழைய பஸ் நிலையம் முன்புறம் தாராபுரம் ரோடு சந்திப்பு பகுதிகளில் பாதசாரிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்கு வசதியாக ரோட்டோரம் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. நேற்று இரவு முதல் தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டனர். இதனால் பஸ் நிலையங்களில் வெளியூர் செல்பவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அரசு போக்குவரத்து ஊழியர்கள் 15 பேர் கொண்ட குழுவினர் பஸ் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். இவர்கள் சிறப்பு பஸ்களின் வருகை, பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவற்றை கவனித்தனர். வருகிற 15–ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பனியன் நிறுவன தொழிலாளர்களில் 30 சதவீதம் பேர் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு நேற்று புறப்பட்டு சென்றார்கள். அதே போல் திருப்பூர் ரெயில் நிலையத்திலும் வெளியூர் செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி இணைப்பு ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.


Next Story