கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற தம்பதி உள்பட 3 பேர் கைது
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவருடைய மனைவி ஜெயா (45). இவர்கள் இருவரும் சவுரிபாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அந்த வழியாக ரோந்து சென்ற பீளமேடு சப்–இன்ஸ்பெக்டர் கந்தசாமி இருவரையும் பிடித்து விசாரித்தார். பின்னர் அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் தேனியில் இருந்து கஞ்சாவை கடத்தி கொண்டு வந்து சிறு,சிறு பொட்டலங்களாக மாற்றி கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக கோவை ஒத்தகால்மண்டபம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சாவை விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை காட்டூர் போலீசார் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றபோது பஸ் நிலையத்தின் எதிர்புறம் உள்ள கழிப்பிடம் அருகே முதியவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நிற்பதை கண்டனர். அவரை பிடித்து சோதனை செய்தபோது 700 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் புதுசித்தாபுதூரை சேர்ந்த பன்னீர்செல்வம் (69) என்பதும், அவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் ரூ.1,280 பறிமுதல் செய்யப்பட்டது.