தர்மபுரி அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தர்மபுரி அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட குடிமைப்பொருட்கள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் போலீசார், தர்மபுரி அருகே உள்ள ஏலகிரியான் கொட்டாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் மாதேஷ்(வயது 30) என்பவர் அரிசி மூட்டைகளை எடுத்து சென்றார்.
கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், மாதேஷை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி செல்வது தெரியவந்தது. அவர் பதுக்கி வைத்திருந்த 25 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து மாதேஷ் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் அவற்றை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாதேஷிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் போலீஸ் உயரதிகாரிகளின் பரிந்துரைப்படி மாதேஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், மாதேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.