மாவட்ட செய்திகள்

கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதுச்சேரியில் மார்ச்- 1 முதல் தடை - முதல் அமைச்சர் அறிவிப்பு + "||" + Puducherry has been banned from March 1st for 14 plastic products

கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதுச்சேரியில் மார்ச்- 1 முதல் தடை - முதல் அமைச்சர் அறிவிப்பு

கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதுச்சேரியில் மார்ச்- 1 முதல் தடை - முதல் அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் மார்ச் 1-ந்தேதி முதல் கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
புதுச்சேரி,

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையொட்டி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கையாக கடந்த 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார் கள். இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பயன் படுத்துவது தெரியவந்தால் அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கைப்பை, தேநீர் குவளை, பிளாஸ்டிக் தாள் உள்ளிட்டவற்றின் பயன்பாடு முற்றிலும் தடைபட்டுள்ளது.

இந்த நடைமுறையை புதுச்சேரியிலும் பின்பற்றி பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் புதுவை அமைச்சரவை கூட்டம் காபினெட் அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் அன்பரசு, கந்தவேலு, பார்த்திபன், அலைஸ்வாஸ், சுந்தரவடிவேலு, தார்செம் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் பிற்பகல் 2.30 மணிவரை நடந்தது.

இதன்பின் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தைப்போல் புதுவையிலும் ஒருமுறை பயன்படுத்தப்படக்கூடிய கைப்பை, தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் தாள், தட்டு, தண்ணீர் குவளை, உறிஞ்சி குழல், கொடி உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்க அமைச்சரவையில் முடிவு எடுத்துள்ளோம்.

இந்த தடை வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுசூழலுக்கான கேடு குறித்து மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வியாபாரிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

ரோடியர், சுதேசி, பாரதி மில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரோடியர் மில்லின் 3-வது யூனிட்டை நடத்தவும், மீதியுள்ள தொழில்பிரிவுகள் சம்பந்தமாக சில காலம் கழித்து இறுதி முடிவுகளை மேற்கொள்வது எனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களுக்கு சொந்தமான மதுக்கடைகளை பொது ஏலத்தில் விடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் நிதி வருவாயை வைத்து அந்த நிறுவனங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இருளர், வில்லி, வேட்டைக்காரன் ஆகிய சமுதாயத்தினரை மலைவாழ் மக்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. புதுவை மாநிலத்தில் தரம் வாய்ந்த ஒரு கட்டிடக்கலை கல்லூரி அமைக்க கொள்கை அளவில் முடிவு எடுத்துள்ளோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...