ஜாக்டோ–ஜியோவின் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 25–ந்தேதி மறியல் போராட்டம்
ஜாக்டோ–ஜியோவின் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் வருகிற 25–ந்தேதி மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சுதாகரன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் சே.நீலகண்டன் வரவேற்றார்.
அங்கன்வாடி மையங்களில் தமிழக அரசு தொடங்க உள்ள எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்காக இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதை நிறுத்த வேண்டும். இதற்கென்று தனியாக பயிற்சி முடித்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்யும் தமிழக அரசின் ஆணையை புறக்கணிக்க வேண்டும்.
பள்ளி இணைப்பு என்ற போர்வையில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளோடு தொடக்கப்பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடவேண்டும். இல்லை என்றால் தொடக்க கல்வி துறையை முற்றிலும் அழிக்கும் விதமாக அமைந்து விடும்.
ஜாக்டோ–ஜியோ அமைப்பின் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி வருகிற 22–ந்தேதி அனைத்து வட்ட தலைநகரங்களிலும் வேலை நிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடத்துவது, 23 மற்றும் 24–ந்தேதிகளில் வட்டத்தலைநகரங்களில் வேலைநிறுத்தத்துடன் மறியல் போராட்டம் நடத்துவது, 25–ந்தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்துடன் கூடிய மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச்செயலாளர் ரெங்கராஜன் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் கதிரவன் நன்றி கூறினார்.