வேப்பந்தட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் விவசாய கருவிகள் தயாரித்து விற்பனை
வேப்பந்தட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் விவசாய கருவிகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பொதுமக்கள் கூடும் இடத்தில் கரி அடுப்பு பட்டறை அமைத்து இரும்பை காய்ச்சி விவசாயிகளுக்கு தேவையான கருவிகளான கோடாரி, முள் வெட்டி, கலக்கட்டு, உளி, கடப்பாரை, அரிவாள், கொடுவாள் உள்ளிட்ட விவசாயக் கருவிகளை விவசாயிகள் கேட்டவுடன் அவ்வப்போது உடனடியாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். அதாவது நல்ல தரமான இரும்பு பட்டைகளை அனலில் காய்ச்சி விவசாயிகள் கண் முன்னே தயாரித்து கொடுக்கிறார்கள். இதில் கோடாரி ரூ.600, கொடுவாள் ரூ.300 என ஒவ்வொரு கருவிகளுக்கு ஏற்றபடி விலை நிர்ணயம் செய்து விற்று வருகிறார்கள். இந்த விவசாய கருவிகள் தயாரிக்கும் பணியில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் கடுமையான உழைப்பை வெளிபடுத்துகிறார்கள். இதனை விவசாயிகள் ஆர்வமுடன் பார்த்து தங்களுக்கு தேவையான கருவிகளை ஆர்டர் கொடுத்து உடனடியாக வாங்கி செல்கின்றனர்.
இந்த விவசாய கருவிகள் தயாரிக்கும் பணி வேப்பந்தட்டை மற்றும் கிருஷ்ணாபுரம் பஸ் நிலையம் அருகே நடந்து வருகிறது. இந்த கருவிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பிரதேசத்தை சேர்ந்த சியாம் கூறியதாவது:–
எங்கள் மாநிலத்தில் போதிய மழை இல்லாததால் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து ஊர் ஊராக சென்று இந்த தொழிலை செய்து வருகிறோம். எங்களுக்கு இந்த தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது. இந்த தொழில் மூலம் போதிய வருவாய் கிடைக்க வில்லை என்றாலும், கிடைக்கின்ற தொகையை வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எங்கள் மாநிலத்திற்கு சென்று பிள்ளைகளை பார்த்து வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.