பிரதம மந்திரி திட்டத்தில் மாடுபிடி வீரர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு


பிரதம மந்திரி திட்டத்தில் மாடுபிடி வீரர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 8:02 PM GMT)

பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் மாடுபிடி வீரர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. நாளை (16–ந் தேதி) பாலமேட்டிலும், 17–ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது.

இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. கலெக்டர் நடராஜன் போட்டி நடைபெறும் இடங்களில் ஆய்வு செய்து, சுப்ரிம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டு நடப்பதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் மாடு பிடி வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கான பிரீமியத்தொகை ரூ.12 மாடு பிடிவீரர்களின் வங்கி கணக்கில் இருந்து நேரிடையாக எடுத்து கொள்ளப்படும்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் போட்டி நடைபெறும் இடங்களில் நேற்று வழங்கப்பட்டது. ஏற்கனவே வங்கி மூலம் காப்பீடு செய்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு காப்பீடு வழங்குவதற்கான பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது. நேற்று மட்டும் 400 பேர் ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story