திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் ஸ்வதேசி தர்சன் திட்டத்தை தொடங்கி வைத்தார்
ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். ஸ்வதேசி தர்சன் திட்டத்தின் கீழ் கோவிலில் நிறைவேற்றப்பட்ட அடிப்படை வசதிகளை அவர் தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம்,
பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் திருவனந்தபுரம் வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மாலை 5 மணிக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், கவர்னர் பி.சதாசிவம் உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் சென்ற அவர், ஆசிராமம் மைதானத்தில் நடைபெற்ற 13 கி.மீ நீளமுள்ள கொல்லம் புறவழிச்சாலையினை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் நரேந்திர பிரதமர் மோடி பேசியதாவது;–
மத்திய சுற்றுலா துறை சார்பில் ஸ்வதேசி தர்சன் திட்டத்தின் கீழ் கோரளாவில் கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ரூ.78 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கேரளாவில் மீன் வளத்துறைக்கு ரூ.7500 கோடி செலவிலான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு கேரளாவிற்கு முன்னுரிமை அளித்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொல்லம் புறவழிச்சாலை பணிகளை மேற்கொள்ள கேரள அரசு மேம்பட்ட ஒத்துழைப்பு வழங்கியது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கேரளாவில் கூடுதல் பயனாளிகளை சேர்க்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கொல்லத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வந்த மோடிக்கு பத்மநாபசாமி கோவிலில் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. ஸ்வதேசி தர்சன் திட்டத்தின் கீழ் பத்மநாப சாமி கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாரம்பரிய வேட்டி உடுத்தி, முண்டு அணிந்த படி கோவிலுக்குள் சென்ற மோடி, பத்மநாபசாமிக்கு தாமரை பூ மாலையை சமர்ப்பித்து சுமார் 15 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். அவருடன் கவர்னர் பி.சதாசிவம், மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், நடிகர் சுரேஷ் கோபி எம்.பி, வி.முரளீதரன் எம்.பி, பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோர் தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்குள் நுழைந்த பிரதமர் நரேந்திர மோடியை மன்னர் குடும்ப உறுப்பினர் ஆதித்யவர்மா கோவில் மற்றும் கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். பிரதமர் வருகையை முன்னிட்டு கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.