தாளவாடி வனப்பகுதியில் கடும் வறட்சி: உணவு, தண்ணீர் தேடி அலையும் யானைகள் வனக்குட்டைகளில் குடிநீர் நிரப்ப கோரிக்கை
தாளவாடி வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் உணவு, தண்ணீரை தேடி யானைகள் அலைகிறது. அதனால் வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தாளவாடி,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், சத்தியமங்கலம், தூக்கநாயக்கன்பாளையம் என 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, மான், புலி, காட்டெருமை, செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது மழை இல்லாததாலும், கடும் பனிப்பொழிவின் காரணமாகவும் தாளவாடி வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக மரம், செடி–கொடிகள் காய்ந்து கிடக்கிறது. இதனால் யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்வது தொடர்கதையாகி விட்டது.
கர்நாடக வனப்பகுதிக்கு உள்பட்ட குண்டல்பேட் மற்றும் பந்திபூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக தமிழக வனப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்துவிடுகிறது. இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டி உள்ள விளைநிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதால் யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். நேற்று யானை ஒன்று தனது குட்டியுடன் தாளவாடி அருகே ஜீர்கள்ளி வனப்பகுதியில் ஒரு குட்டையில் குறைந்த அளவிலேயே உள்ள தண்ணீரை குடித்துச்சென்றது. இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வறட்சி ஏற்பட்டு உள்ளதால் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. அதனால் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீரை குட்டைகளில் நிரப்புவதோடு, விவசாய நிலங்களில் புகாத வகையில் அகழி அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.