திருச்சி அருகே பயங்கரம் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திருச்சி அருகே காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவரை 4 பேர் கொண்ட கும்பல் குத்திக் கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமயபுரம்,
திருச்சியயை அடுத்த, சிறுகனூர் அருகே உள்ள திண்ணக்குளம் நடுத் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தமிழ்வாணன்(வயது 20). இவர் சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வந்தார். இவர், சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் 4–ம் ஆண்டு படித்து வரும் 20 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக படிக்கும்போதே நட்புடன் பழகி வந்தனர்.
பொங்கலையொட்டி நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சென்றனர். பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர்கள் இரவு 7½ மணி அளவில் குமுளூர் வனப்பகுதி அருகே சென்றபோது தமிழ்வாணன் மோட்டார் சைக்கிளை காட்டு பகுதிக்குள் ஓட்டிச் சென்றார்.
அங்கு அவர்கள் இருவரும் அமர்ந்து தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் காட்டுப்பகுதிக்குள் நிற்பதை கண்ட அந்த வழியாக சென்ற 4 பேர் என்ன நடக்கிறது என்று இறங்கி பார்த்துள்ளனர். அப்போது இருட்டுக்குள் காதலர்கள் அமர்ந்திருப்பதை பார்த்ததும் தமிழ்வாணனை தள்ளிவிட்டு 4 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து காதலியை மீட்க தமிழ்வாணன் போராடினார். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் அருகே கிடந்த மது பாட்டிலை உடைத்து தமிழ்வாணனை குத்தினர். இதில், கழுத்தில் குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த தமிழ்வாணன் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இதுகுறித்து அந்த பெண், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்னர், கொலை செய்யப்பட்ட தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சம்பவ இடத்தில், போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்வாணன் கொலை செய்யப்பட்ட இடம், ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியாகும். இந்த இடத்தில் திருட்டு, கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வந்து பதுங்கி இருப்பார்களாம். பகல் நேரத்தில் சிலர் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு இந்த இடத்தில் அமர்ந்து குடிப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இடத்தில் தமிழ்வாணன் காதலியுடன் அமர்ந்திருப்பதை கண்டதும் 4 பேர் கும்பல் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து காதலியை மீட்க தமிழ்வாணன் நீண்ட நேரம் போராடியே உயிரை விட்டிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா,(சிறுகனூர்), மதன்(சமயபுரம்), முத்துக்குமார்(லால்குடி) ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குமுளூர் வனப்பகுதி, புஞ்சை சங்கேந்தி, கொணலை உள்பட பல்வேறு இடங்களில் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழ்வாணன், கல்லூரி சென்ற நேரம் தவிர மற்ற நேரங்களிலும், கல்லூரி விடுமுறை நாட்களிலும் மாடுகளிடம் பிரியமாக பழகி உள்ளார். அதனை குளிக்க வைப்பது, அலங்கரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார். இதனை பிரிண்ட் போட்டு வீட்டில் வைத்துள்ளார்.