மயிலாடுதுறை அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை, காரை ஏற்றி கொல்ல முயற்சி மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது


மயிலாடுதுறை அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை, காரை ஏற்றி கொல்ல முயற்சி மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2019 5:00 AM IST (Updated: 16 Jan 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கும்பகோணம்–காரைக்கால் சாலையில் பாலையூர் போலீஸ் நிலையம் முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் வழிமறித்தனர். அப்போது அந்த காரில் வந்தவர்கள், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இதில் சுதாரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர், விலகி நின்றதால் உயிர் தப்பினார். இந்த நிலையில் கார் அங்கிருந்த இரும்பு தடுப்பு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

அப்போது எதிரே வந்த ஸ்கூட்டர் மீது மோதியதில் ஸ்ரீகண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி உஷா(வயது41) என்பவர் படுகாயம் அடைந்தார். அதேபோல மோட்டார்சைக்கிளில் வந்த மயிலாடுதுறை திருவிழந்தூர் வடக்கு வீதியை சேர்ந்த பெரியசாமி மகன் சுரேஷ்(30) என்பவரும் கார் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தியபடி தப்பி சென்ற அந்த காரை போலீசார் துரத்தி சென்றனர். எஸ்.புதூர் கடைவீதி பகுதியில் சென்றபோது அந்த காரின் டயர் வெடித்து, அங்கேயே நின்று விட்டது.

இதையடுத்து போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து, அதில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள தருமபுரம் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த கிறிஸ்துராஜ் மகன் பவுலின்ராஜ்(26) என்பதும், அவருடன் வந்தவர் காரைக்கால் அருகே உள்ள பச்சூர் பி.எஸ்.ஆர்.நகரை சேர்ந்த சண்முகம் மகன் விக்னேஷ்(21) என்பதும் தெரியவந்தது.

மேலும் காரில் 9 மதுபாட்டில்களும், 180 லிட்டர் சாராயமும் கும்பகோணத்துக்கு கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுலின்ராஜ், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த உஷா, சுரேஷ் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story