மகனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த பெண் தற்கொலை

மகனை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பரங்கிமலை நசரத்புரத்தை சேர்ந்தவர் கோபிநாத். இவருடைய மனைவி பத்மா (வயது 35). இவர்களுக்கு பரத் (13) என்ற பார்வையற்ற மகன் இருந்தார். இவர், அடையாறில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகாலமாக கணவன்–மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். பத்மா, தனது மகன் பரத்துடன் தனியாக வசித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 14–ந் தேதி வறுமை மற்றும் தனியாக வாழ்ந்து வந்ததால் மனமுடைந்த பத்மா, பிளாஸ்டிக் பையால் முகத்தில் இறுக்க கட்டி தனது மகன் பரத்தை கொன்றார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
ஆனால் மனம்மாறிய பத்மா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது மகனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு பரத் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. இதையடுத்து பரங்கிமலை போலீசார் இதுபற்றி கொலை வழக்கு பதிவு செய்து பத்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபத்தில் இந்த வழக்கில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து பத்மா வெளியே வந்தார். மகன் இறந்ததால் மன அழுத்தத்துடன் காணப்பட்ட பத்மா, நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த பரங்கிமலை போலீசார், பத்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.