போரூரில் தலையில் கல்லைப்போட்டு மாநகர பஸ் கண்டக்டர் கொலை
போரூரில் தலையில் கல்லைப்போட்டு மாநகர பஸ் கண்டக்டர் கொலை செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
சென்னை போரூர் ஆற்காடு சாலை அருகே உள்ள மதுபான கடைக்கு வெளியே நேற்று முன்தினம் காலை ஆண் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்தனர். அதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர், போரூர் சந்தோஷ் நகரைச் சேர்ந்த மதிவாணன்(வயது 45) என்பதும், அய்யப்பன்தாங்கல் பணிமனையில் மாநகர பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து மதிவாணன், ஆற்காடு சாலையில் உள்ள அந்த மதுபான கடைக்கு சென்று மது அருந்தியதாகவும், அப்போது பாரில் இருந்த சிலருடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு மதுபான பாரில் வெளியே வந்த மதிவாணனை, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிவாணனை கொலை செய்தது யார்?, அவருடன் மதுபான கடைக்கு வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
கொலையான மதிவாணனுக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.