ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற அண்ணன்–தம்பி கைது


ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற அண்ணன்–தம்பி கைது
x
தினத்தந்தி 17 Jan 2019 4:00 AM IST (Updated: 17 Jan 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற அண்ணன்–தம்பி இருவரையும் நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடலோர காவல்படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு இலங்கை படகு ஒன்று நிற்பதை கண்டனர். இதையடுத்து அந்த படகையும், அதில் இருந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த சிவராஜன்(வயது 41), அன்பு குமரன் என்ற சின்னத்தம்பி (38) ஆகியோர் என்பதும், அண்ணன்–தம்பிகளான இவர்கள் இருவரும் கடந்த 1990–ம் ஆண்டு அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்து மதுரை ஆனையூரில் உள்ள முகாமில் குடும்பத்துடன் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இவர்கள் மீண்டும் இலங்கை செல்ல முடிவு செய்து கடந்த 14–ந்தேதி இலங்கையில் இருந்து பாம்பன் வந்திருந்த பைபர் படகில் அங்கு செல்ல முயன்றதாகவும் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் இந்திய பணம், 10 அமெரிக்க டாலர், 1 ஹாங்காங் பணம், 2 ஜி.பி.எஸ். கருவிகள், 4 செல்போன்கள், 3 பவுன் தங்கசங்கிலி, ஒரு தோடு, ஆதார் கார்டு ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் இவர்களிடம் விசாரித்தபோது மதுரையில் எஸ்.எஸ்.காலனி, கூடல் நகர், மீனாட்சிபுரம், அய்யர் பங்களா ஆகிய பகுதிகளில் மீன்கடை வைத்து நடத்தி வருவதும், சிவராஜன் மீது மதுரை போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

கடன் பிரச்சினை காரணமாக வவுனியாவில் பூர்வீக இடத்தை விற்பனை செய்து விட்டு அந்த பணத்தில் இங்குள்ள கடன்களை அடைக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அண்ணன்–தம்பி இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story