கடற்கரை சாலையில் பொங்கல் கலைவிழா


கடற்கரை சாலையில் பொங்கல் கலைவிழா
x
தினத்தந்தி 16 Jan 2019 10:30 PM GMT (Updated: 16 Jan 2019 8:48 PM GMT)

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் பொங்கல் கலைவிழா நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை, திரைப்பட மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் கடற்கரை காந்தி திடலில் பொங்கல் கலைவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் கலக்கல் காங்கேயன் மற்றும் நீலவேணி இணைந்து வழங்கிய இன்னிசை பாட்டு மன்றம் நடந்தது. முன்னதாக பாரதியார் பல்லைக்கலைக் கூட மாணவ - மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. விழாவில் 2-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து திரைப்பட இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் திரைப்பட பின்னணி பாடகர்கள் கவுசிக், அனு உள்பட பலர் கலந்துகொண்டு திரைப்பட பாடல்களை பாடினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கேட்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் இன்று (வியாழக்கிழமை) கிராமிய இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரைப்பட பின்னணி பாடகர்கள் சின்னப்பொண்ணு, ஜெயமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பொங்கல் விழாவையொட்டி புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் தாவரவியல் பூங்காவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன் விழாவுக்கு தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதில் தஞ்சாவூர் கலைமகள் நாடக மன்றம் தமிழ்பாவை குழுவினர் சார்பில் பெண்ணுரிமை சமூக நாடகம், புதுவை தமிழ் இசை தப்பாட்டக் கலைக்குழுவின் தப்பாட்டம், மயூரி கிராமிய கலைமன்றம் சார்பில் கிராமியகலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ரசித்தனர். முடிவில் கலை பண்பாட்டுத்துறை கண்காணிப்பாளர் கலியபெருமாள் நன்றி கூறினார்.

Next Story