பெற்றோர்களை பராமரித்து வந்த சிறுமிக்கு ரூ.3¾ லட்சத்தில் புதிய வீடு - ஓ.பன்னீர்செல்வம் சொந்த செலவில் கட்டி கொடுத்தார்


பெற்றோர்களை பராமரித்து வந்த சிறுமிக்கு ரூ.3¾ லட்சத்தில் புதிய வீடு - ஓ.பன்னீர்செல்வம் சொந்த செலவில் கட்டி கொடுத்தார்
x
தினத்தந்தி 17 Jan 2019 5:00 AM IST (Updated: 17 Jan 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர்களை பராமரித்து வந்த சிறுமிக்கு ரூ.3¾ லட்சத்தில் புதிய வீடு ஒன்றை ஓ.பன்னீர்செல்வம் சொந்த செலவில் கட்டி கொடுத்தார்.

பெரியகுளம்,

சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை ஊராட்சி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் ஊராட்சியில் மேல்நிலைத்தொட்டி இயக்குபவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள ஒரு கிணற்றில் ஆடு தவறி விழுந்துவிட்டது. அதனை காப்பாற்ற சந்திரசேகரன் கயிறு கட்டி கிணற்றில் இறங்க முயன்றார். அப்போது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்ததில் அவருக்கு முதுகு தண்டுவடம் உடைந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இவரது மனைவி முத்தம்மாள். இவரும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

இவர்களது மகள் அனிதா(வயது 13). இவள் காமாட்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். உடல்நிலை சரியில்லாத தந்தையையும், தாயையும் அவள் பராமரித்து வந்தாள். பெற்றோரை சிறுமி பராமரித்து வருவது குறித்து தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அனிதாவை அழைத்து விசாரித்தார். இதைத்தொடர்ந்து அவளுக்கு சங்கரலிங்கபுரத்தில் ரூ.3¾ லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு ஒன்றை சொந்த செலவில் கட்டி கொடுத்தார். புதிய வீட்டின் சாவியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமி அனிதாவிடம் வழங்கினார்.


Next Story