ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் கைது


ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2019 11:36 PM GMT (Updated: 17 Jan 2019 11:36 PM GMT)

ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் போலீசில் சிக்கி உள்ளார். இவர் இந்தி நடிகையை ஏமாற்றி கற்பழித்து பணமோசடி செய்ததும்தெரியவந்தது.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் அமர்ஜித் சிங். வெளிநாட்டு வாழ் இந்தியரான இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜ் என்பவர் அறிமுகமானார். அப்போது அவர் தான் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருப்பதாகவும், தன்னிடம் முதலீடு செய்தால் பலமடங்கு வருமானம் பெறலாம் எனவும் ஆசை வார்த்தை தெரிவித்தார்.

இதனை நம்பிய அமர்ஜித் சிங் பல லட்சம் பணத்தை கொடுத்து உள்ளார். ஆனால் ராஜ் கூறியபடி அவருக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ராஜை சந்தித்து பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதையடுத்து அமர்ஜித் சிங், இதுபற்றி பாந்திரா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், ராஜின் உண்மையான பெயர் சர்பராஜ் முகமது என்பதும், ராஜ் என்ற பெயரில் அவர் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து பண மோசடி செய்ததும் தெரியவந்தது.

மேலும் அவர் ஒரு இந்தி நடிகையிடம் திருமணம் செய்வதாக ஏமாற்றி கற்பழித்து விட்டு, அவரிடம் இருந்து ரூ.15 கோடியை அபேஸ் செய்து உள்ளார். இவ்வாறு பல பேரிடம் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் போல நடித்து மொத்தம் ரூ.19 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பாந்திரா போலீசார், குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து அவரை தேடி வந்தனர். பின்னர் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Next Story