இளம்பெண்ணிடம் நகை பறித்த முன்னாள் போலீஸ்காரருக்கு 5 ஆண்டு சிறை கோவில்பட்டி கோர்ட்டு தீர்ப்பு
இளம்பெண்ணிடம் நகை பறித்த வழக்கில், முன்னாள் போலீஸ்காரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவில்பட்டி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கோவில்பட்டி,
இளம்பெண்ணிடம் நகை பறித்த வழக்கில், முன்னாள் போலீஸ்காரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவில்பட்டி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நகை பறிப்புவிருதுநகர் மாவட்டம் சுந்தரராஜபுரம் சாவடி தெருவைச் சேர்ந்தவர் போஸ். இவருடைய மகன் காவேரி மணியன் (வயது 36). இவர் கடந்த 2003–ம் ஆண்டு தமிழக காவல் துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். பின்னர் கடந்த 2013–ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றினார்.
அப்போது கடந்த 29–1–2013 அன்று இரவில் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (36), அவருடைய தங்கை செல்வி (30) ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி பைபாஸ் ரோடு அனுமன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களை மர்மநபர்கள் 3 பேர் வழிமறித்து தாக்கினர். பின்னர் செல்வி அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்தனர்.
போலீஸ்காரர் கைதுஉடனே செந்தில்குமார், செல்வி ஆகிய 2 பேரும் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மர்மநபர்களை விரட்டிச் சென்றனர். இதில் மர்மநபர்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து சென்று, கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அவர், அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிய காவேரி மணியன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடியவர்கள் கயத்தாறை சேர்ந்த சுடலைமணி, கணேசன் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு வழக்குகள்போலீசாரின் விசாரணையில், போலீஸ்காரரான காவேரி மணியன் தன்னுடைய கூட்டாளிகளான சுடலைமணி, கணேசன், கயத்தாறு இந்திரா காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் கடந்த 21–1–2013 அன்று கயத்தாறை சேர்ந்த முருகானந்தம் (45) கோவில்பட்டி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி, ஒரு பவுன் தங்க மோதிரத்தை பறித்து சென்றனர். பின்னர் 25–1–2013 அன்று கழுகுமலையில் இருந்து இருக்கன்குடி கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேரிடம் கோவில்பட்டி பைபாஸ் ரோடு அய்யப்பன் கோவில் அருகில் அரிவாளை காட்டி மிரட்டி 14 பவுன் நகைகளை பறித்து சென்றது தெரியவந்து உள்ளது. இதையடுத்து போலீஸ்காரர் காவேரி மணியன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
5 ஆண்டு சிறைஇதுதொடர்பாக காவேரி மணியன், சுடலைமணி, கணேசன், வெங்கடேஷ் ஆகிய 4 பேர் மீது கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவில்பட்டி சப்–கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால், இளம்பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் காவேரி மணியனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சுடலைமணி, கணேசன், வெங்கடேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மற்ற 2 வழக்குகளிலும் காவேரி மணியன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதையடுத்து காவேரி மணியனை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முருகேசன் ஆஜரானார்.