மாவட்ட செய்திகள்

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் போராட்டம் நடத்த என்ஜினீயரிங் மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு + "||" + Engineering students struggle to attract the influx of sensation on the VOC Park

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் போராட்டம் நடத்த என்ஜினீயரிங் மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் போராட்டம் நடத்த என்ஜினீயரிங் மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு வ.உ.சி.பூங்காவில் போராட்டம் நடத்த என்ஜினீயரிங் மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

தமிழகத்தில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் தாங்கள் தோல்வி அடைந்த பாடங்களை அடுத்த பருவத்தேர்விலேயே எழுதிக்கொள்ளும் நடைமுறை இருந்தது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு புதிய நடைமுறையை கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி முதல் பருவத்தில் ஒரு பாடம் தோல்வி அடைந்தால் சம்பந்தப்பட்ட மாணவர் 2–ம் பருவத்தில் திரும்பவும் எழுத முடியாது. ஒரு ஆண்டு காத்திருந்து 3–ம் பருவத்தில்தான் எழுத முடியும். இந்த தேர்வுமுறை என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே புதிய தேர்வு முறையை மாற்றம் செய்து, ஏற்கனவே இருந்த தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று என்ஜினீயரிங் மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற அண்ணா பல்கலைக்கழகத்தை வலியுறுத்தும் வகையில் நேற்று திடீர் போராட்டத்துக்கு என்ஜினீயரிங் மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்பேரில் நேற்று ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் காலை 9 மணிக்கு 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் குவிந்தனர்.

மாணவர்கள் அனைவரும் மைதானத்தின் நடுவில் வெட்ட வெளியில் கூடி உட்கார்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் கேட்டபோது, ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் தேர்வு முறையை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து இருப்பதாக கூறினார்கள்.

அவர்களிடம் உரிய அனுமதி இன்றி போராட்டம் நடத்த முடியாது. மேலும், வ.உ.சி.பூங்கா மைதானம் போராட்டம் நடத்துவதற்கான இடம் அல்ல. மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகங்களில் போராட்டம் நடத்தலாம் என்று போலீசார் அறிவுரை கூறினார்கள். சுமார் 2 மணி நேரம் அங்கு காத்திருந்த மாணவர்கள், போலீசாரின் அறிவுரையின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்துக்காக பஸ்களில் வந்த மாணவர்களையும் தடுத்து திரும்பி செல்ல வைத்தனர். வ.உ.சி.பூங்கா மைதானத்துக்கு தொடர்ச்சியாக மாணவர்கள் வந்துகொண்டு இருந்ததால் போலீசார் அவர்களை விசாரித்து திருப்பி அனுப்பினார்கள்.

இதற்கிடையே போராட்டம் நடத்த அனுமதி கோரி மாணவர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனிடம் மனு ஒன்று கொடுத்தனர். பின்னர் அவரவர் கல்லூரிகளுக்கு சென்று அங்கு சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பெருந்துறை பகுதியில் உள்ள 2 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி மாணவர்கள் சிலர் கூறியதாவது:–

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2017–ம் ஆண்டு புதிய தேர்வு நடைமுறையை அறிவித்து அது தற்போது செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. இது அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவ–மாணவிகளை பெரிதும் பாதிக்கும் திட்டமாக இருக்கிறது. முன்பு எந்த ஒரு பருவத்திலும் எழுதும் பாடம் தோல்வி அடைந்தால் அடுத்த பருவத்தில் அதை எழுதி வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தற்போது ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நன்கு படிக்கும் ஒரு மாணவர் உடல்நிலை பாதிப்பு, குடும்ப சூழல் காரணமாக ஒரு பருவத்தில் தேர்வுகள் எழுத முடியாத நிலை இருந்தாலும், அதை அடுத்த பருவத்தில் முழுமையாக எழுதி தேர்ச்சி பெற முடிந்தது. ஆனால் தற்போதைய நடைமுறைப்படி, சம்பந்தப்பட்ட மாணவர் ஒரு ஆண்டு காத்திருந்து எழுதுவதுடன் நடப்பு பருவ தேர்வுகளுடன் கூடுதலாக 3 பாடங்கள் மட்டுமே எழுத முடியும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பருவத்துக்கு 8 அல்லது 9 பாட தேர்வுகள் நடைபெறும். சூழ்நிலை காரணமாக ஒரு மாணவர் அல்லது மாணவி ஒரு பருவ தேர்வு எழுதாவிட்டால் அவர் எத்தனை ஆண்டுகள் இந்த தேர்வினை எழுத முடியும். இறுதி ஆண்டில் படிக்கும் மாணவர்கள் 7–வது பருவத்தில் ஒரு பாடம் தோல்வி அடைந்து விட்டால் அதை 8–வது பருவத்தில் எழுதி தேர்ச்சி பெற்று பட்டத்தை உடனடியாக பெற முடிந்தது. ஆனால் இப்போது அவர் கல்லூரி படிப்பு முடிந்து ஒரு ஆண்டு காத்திருந்துதான் தேர்வு எழுத முடியும். இதனால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். பட்டம் பெறுவதில் கால தாமதம் ஏற்படும். உயர் படிப்புக்கு உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்படும்.

இந்த தேர்வு முறை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. தன்னாட்சி கல்லூரிகளில் ஒரு பருவம் முடிந்து அதில் தோல்வி அடைந்த மாணவர்கள் அல்லது தேர்வு எழுத முடியாத மாணவர்கள் அடுத்த 15 நாட்களில் உடனடி தேர்வு மூலம் அதை சரி செய்ய முடியும். ஆனால் அண்ணா பல்கலைக்கழக மாணவ–மாணவிகள் மட்டும் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம். கடந்த ஒரு ஆண்டாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக்கான கேள்விகள் பாடத்திட்டத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறது.

தேர்வு தாள்களை திருத்தம் செய்ய பல்கலைக்கழகத்தால் ஒரு விடைத்தாள் (கீ–ஆன்சர்) வழங்கப்படும். அதில் இருக்கும் வார்த்தைகள், வரிகளின் படி இருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் என்ஜினீயரிங் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதியும் தோல்வி அடைய வேண்டியது இருக்கிறது. எனவே இதுபோன்ற தவறான நடைமுறைகளால் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தேர்வு நடைமுறைகளை மாற்றம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இல்லை என்றால் மாணவர் போராட்டம் தீவிரமாக நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் அனைத்து கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
2. திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி 8 கிராம மக்கள் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி 8 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3. எரிசாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சின்னசேலம் அருகே எரிசாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. சாலை போக்குவரத்து கழகத்தில் தனியார் மயத்தை கைவிடக்கோரி போராட்டம் ஊழியர்கள் சங்கம் முடிவு
தனியார் மயத்தை கைவிடக்கோரி கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்துவது என சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
5. வெள்ளலூர் நாடு கோவில்களை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு: 62 கிராம மக்கள் ஒரே இடத்தில் திரண்டு போராட்டம்
மதுரை அருகே மேலூர் வெள்ளலூர் நாடு கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 62 கிராம மக்கள் ஓரிடத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். கடைகளும் அடைக்கப்பட்டன.

ஆசிரியரின் தேர்வுகள்...