தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2019 4:00 AM IST (Updated: 19 Jan 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், நந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி, மாதப்பன், அப்பாசாமி, ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் நடராஜன், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் தியோரடர் ராபின்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் தர்மன், தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் 3,500 தொடக்கப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கக்கூடாது. இதனால், 3,500 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர்களின் பணியிடங்கள் ஒழிக்கப்படும் என்பதால் இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கோஷங்கள் எழுப்பினர். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டே-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தர்மபுரி

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், கூட்டமைப்பு நிர்வாகிகள் ரத்தினம், ஆனந்தன், பாஸ்கரன், பழனி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story