சி.பி.எஸ்.இ.யாக மாற்ற முடிவு கன்டோன்மெண்ட் பள்ளிகளில் இருந்து குழந்தைகளை வெளியேற்றக்கூடாது தலைமை நிர்வாக அதிகாரியிடம் பெற்றோர்கள் மனு
சி.பி.எஸ்.இ.யாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதால் கன்டோன்மெண்ட் பள்ளிகளில் இருந்து தங்களது குழந்தைகளை வெளியேற்றக்கூடாது என்று தலைமை நிர்வாக அதிகாரியிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே கன்டோன்மெண்ட் போர்டு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. நிர்வாகத்தின் கீழ் சின்னவண்டி சோலை மற்றும் வெலிங்டனில் 2 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சின்னவண்டி சோலையில் உள்ள பள்ளி ஆங்கில வழி பள்ளியாகவும், வெலிங்டனில் உள்ள பள்ளி தமிழ் வழி உயர்நிலைப்பள்ளியாகவும் உள்ளது. இந்த இரு பள்ளிகளிலும் கன்டோன்மெண்ட் நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாணவ–மாணவிகள் மட்டுமின்றி பர்லியார், ஒசட்டி, பேரட்டி, காமராஜபுரம் போன்ற பகுதிகளில் இருந்து 950 மாணவ– மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில் 2 பள்ளிகளையும் ஒன்றிணைத்து 2019–2020–ம் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் ஒரே பள்ளியாக மாற்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக கன்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள மாணவ–மாணவிகள் தவிர மற்ற இடங்களில் இருந்து வரும் மாணவ–மாணவிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற தகவல் பரவியது.
இதனை தொடர்ந்து கன்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதி இல்லாத மற்ற இடங்களில் இருந்து வந்து பயிலும் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று கோரி கன்டோன்மெண்ட் போர்டு தலைமை நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மாவை சந்தித்து மனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து பரிசீலிப்பதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து ஹரிஷ் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது:–
2019–2020–ம் கல்வியாண்டில் 2 பள்ளிகளையும் ஒன்றிணைத்து சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள கமிட்டி அமைக்கப் பட்டு உள்ளது. இந்த கமிட்டி இந்த மாத இறுதியில் அறிக்கையை கொடுக்கும். இதனடிப்படையில் எத்தனை குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியும் என்ற விவரம் தெரியும். தற்போதுள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.