தேசிய அளவில் காங்கிரஸ்–இந்திய கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை முத்தரசன் பேட்டி


தேசிய அளவில் காங்கிரஸ்–இந்திய கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 19 Jan 2019 4:30 AM IST (Updated: 19 Jan 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என முத்தரசன் கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் நிலையை தக்க வைத்து கொள்வதற்காக பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய பா.ஜ.க. அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது சமூகநீதிக்கு எதிரானது. இடஒதுக்கீடு என்பது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு, நிமிரமுடியாமல் இருப்பவர்கள் முன்னேறியவர்களுடன் போட்டியிட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டதாகும்.

இந்த பிரச்சினையில் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை. பதவி ஏற்றவுடன் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என பல்வேறு வாக்குறுதிகளை தந்த பிரதமர் அதனை செய்யாமல் சமூகநீதிக்கு எதிரான இடஒதுக்கீட்டை செய்துள்ளார்.

ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது கோடநாடு எஸ்டேட்டில் இருந்த பங்களா அவரது அதிகாரபூர்வ முகாம் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அதில் தவறு இல்லை. ஆனால் அவர் இறந்த பின்னர் அங்கிருந்த அரசு ஆவணங்களை கைப்பற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர்கள் அளித்த பேட்டியில் முதல்–அமைச்சரை தொடர்புபடுத்தி கூறி உள்ளனர். கோடநாடு விவகாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம்.

பட்டாசு ஆலைகள் உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளன. 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிமையாளர்கள், தொழிலாளர்களுடன் இணைந்து நாங்களும் போராட தயாராக உள்ளோம். தற்போது உள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வது அவரது விருப்பம். இதில் நாங்கள் ஒன்றும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பொருத்தமட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேசிய அளவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வாய்ப்பு இல்லை. அந்தந்த மாநில அளவில் காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.பிரதமர் மோடி வருகிற 27–ந்தேதி மதுரைக்கு வருவதால் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது அவரது கருத்து. அவர் அப்படி சொல்வது இயல்புதான். ஆனால் பிரதமரின் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழக மக்கள் மேல் தமிழிசைக்கு அக்கறை இருந்தால் அவரும் பிற பா.ஜ.க. நிர்வாகிகளும் பிரதமரிடம் சென்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்ட ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதியை பெற்று தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story