தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் மக்காச்சோளம்– பேட்டரி மின்வேலி கம்பிகள் சேதம்


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் மக்காச்சோளம்– பேட்டரி மின்வேலி கம்பிகள் சேதம்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:00 AM IST (Updated: 20 Jan 2019 7:42 PM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தனர். மேலும், பேட்டரி மின்வேலி கம்பிகளையும் யானைகள் சேதப்படுத்தியது

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், குரங்கு, செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது போதிய மழை இல்லாததால் தாளவாடி வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளதோடு மரம், செடி–கொடிகள் கருகி வருகின்றன. மேலும் வனக்குட்டைகளில் தண்ணீரும் இல்லை.

இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமப்பகுதி மற்றும் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி தோட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள கரும்பு, வாழை, ராகி மற்றும் மக்காச்சோள பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்து வருகிறது.

இந்துநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து 4 யானைகள் வெளியேறின. இந்த யானைகள் தாளவாடி அருகே உள்ள கரளவாடி பகுதியில் புகுந்தது. பின்னர் அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்திக்கொண்டு இருந்தது.

அப்போது யானையின் பிளிறல் சத்தம் கேட்டு தோட்டத்தையொட்டி உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த சிவக்குமார் எழுந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது 4 யானைகள் தோட்டத்தில் நின்று கொண்டு மக்காச்சோள பயிர்களை தின்றும் காலால் மிதித்து நாசப்படுத்திக்கொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு அழைத்துக்கொண்டு அங்கு சென்றார்.

பின்னர் பட்டாசுகள் வெடித்தும், தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பியும் அந்த யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த 4 யானைகளும் நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.

யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததில் ¾ ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்களை நாசம் ஆனது. மேலும் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பேட்டரி மின்வேலிகள் மற்றும் கற்கள் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாளவாடி வனத்துறையினர் அந்த தோட்டத்துக்கு சென்று யானைகள் சேதப்படுத்தி மக்காச்சோள பயிர்கள் மற்றும் மின்வேலிகளை பார்வையிட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் யானைகள் அடிக்கடி கிராமப்பகுதிக்குள் புகுந்துவிடுகிறது. குறிப்பாக தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. அதனால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாத வகையில் அகழி அமைப்பதோடு, வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதேபோல் அந்தியூர் வனப்பகுதியில் இருந்து ஆண் யானை ஒன்று நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வெளியேறியது. பின்னர் அந்த யானை வரட்டுப்பள்ளம் அணை வட்டக்காடு பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தியது. யானையை கண்டதும் தோட்டத்தில் இருந்த நாய் குரைத்தது. இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த அவர் அங்கு எழுந்து சென்று பார்த்தபோது ஒற்றை யானை நின்று கொண்டு வாழைகளை நாசம் செய்தது.

இதைத்தொடர்ந்து அவர் அக்கம் பக்கத்து விவசாயிகளுடன் சேர்ந்து தீப்பந்தம் காட்டி யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றார். எனினும் அந்த யானை காட்டுக்குள் செல்லாமல் விவசாயிகளுக்கு போக்கு காட்டியது. பின்னர் அந்த யானை நேற்று அதிகாலை 3 மணி அளவில் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.


Next Story