கடம்பூர் அருகே போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


கடம்பூர் அருகே போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2019 11:15 PM GMT (Updated: 20 Jan 2019 7:05 PM GMT)

கடம்பூர் அருகே போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் பஸ் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கு வரும் குடிமகன்களால் தொந்தரவு ஏற்பட்டதால் பொதுமக்கள் இந்த கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களை அழைத்து, டாஸ்மாக் கடை 20 நாட்களில் அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் காலக்கெடு முடிந்தும் கடை அகற்றப்படவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் அந்த பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவிகள் உள்பட 200–க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடையை அகற்றுவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஆனால் இந்த டாஸ்மாக் கடை 2 கி.மீ தொலைவில் உள்ள ஜீவா நகரில் அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. இதை அறிந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று கடை முன்பு உட்கார்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று காலை வரை விடிய, விடிய இந்த போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வந்து அங்கு டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடந்தது. இதையும் பொதுமக்கள் எதிர்த்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். மதியம் 2.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் டாஸ்மாக் தாசில்தார் சையது அமீது, பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், ‘டாஸ்மாக் கடை அமைக்கப்படமாட்டாது’ என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story